காவலர் தேர்வு எழுத வந்த இரு பெண்கள் கடத்தல் - அக்காவின் கணவர் உட்பட 3 பேர் கைது
|காவலர் தேர்வு எழுத வந்த மனைவியின் தங்கை மற்றும் அவரது தோழியை காரில் கடத்திய அக்காவின் கணவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பசாந்த சிவம். இவர் தனது மனைவியின் சகோதரி மற்றும் அவரது தோழி என இருவரை காவலர் தேர்வு எழுதுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். தேர்வு எழுதிய பின்னர் இரண்டு பெண்களும் சில்வர் பீச்சில் பொழுதை கழித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் காரில் வந்த பசாந்த சிவம், இருவரையும் பேருந்து நிலையத்தில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். கார் சென்ற சிறிது தூரத்தில் ஐந்து பேர் காரில் ஏறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த, இரு பெண்களும் கேட்டபோது அக்கா கணவருடன் திருமணம் செய்து வைப்பதற்காக கடத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் பதறிப்போன பெண்கள் இருவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் நின்றபோது, காரில் இருந்து சாலையில் குதித்து கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் காரில் இருந்த ஆறு பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், பசாந்த சிவம் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.