< Back
மாநில செய்திகள்
சிதம்பரத்தில் ரூ.2 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி:    தொழில் அதிபரை கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை    விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 4 பேர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரத்தில் ரூ.2 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி: தொழில் அதிபரை கடத்தி விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
9 Nov 2022 6:45 PM GMT

சிதம்பரத்தில் ரூ.2 கோடி சொத்தை அபகரிப்பதற்காக தொழில் அதிபரை கடத்தி சென்று, விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிதம்பரம்,

தஞ்சாவூா் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமம் அல்மதினா தெருவை சேர்ந்தவர் ஹாஜாமொய்தீன் (வயது 52), தொழில் அதிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த ஜமால் மைதீன் (49) என்பவருக்கு சொந்தமான சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் மற்றும் காலிமனையை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த இடத்தை ஜமால்மைதீன், ஹாஜாமொய்தீனிடம் இருந்து வாடகைக்கு வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதில் வாடகையை சரிவர கொடுக்காததால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இடம் விற்பனை

இதுகுறித்து ஹாஜாமொய்தீன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரச்சினைக்குரிய இடத்தை விற்று தரும்படி ஹாஜா மொய்தீன், சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் தனது நண்பர் குமாரிடம்(30) கூறியுள்ளார்.

அதன்பேரில் கடந்த 5-ந்தேதி சிதம்பரம் வந்த குமார், ஹாஜா மொய்தீனிடம் நிலத்திற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சிதம்பரம் லால்கான் தெருவுக்கு வருமாறு கூறியுள்ளார்.

விடுதியில் அடைத்து சித்ரவதை

இதையடுத்து அவர் லால்கான் தெருவுக்கு சென்று கொண்டிருந்த போது, ஜமால்மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன்(49) மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஹாஜாமொய்தீனை காரில் கடத்திச் சென்றார்.

பின்னர் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2 நாட்களாக அடைத்து வைத்து, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான அந்த சொத்துக்களை அபகரிக்கும் விதமாக, அதற்கான அசல் ஆவணங்களை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

காரில் கடத்தல்

இதற்கிடையே ஜமால் மைதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதியில் இருந்து சென்ற நேரத்தில், ஹாஜா மொய்தீன் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து குமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து குமார் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார், அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அப்போது அங்கு யாரும் இல்லை. இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விடுதியில் இருந்து ஹாஜா மொய்தீனை மீண்டும் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

செல்போன் சிக்னலால் சிக்கினர்

தொடர்ந்து செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு செய்ததில், சென்னை நீலாங்கரை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் கார் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து நீலாங்கரை போலீசார் உதவியுடன் காரில் கடத்தப்பட்ட ஹாஜாமொய்தீனை சிதம்பரம் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஜமால்மைதீன், செல்லப்பன், ஓமக்குளத்தை சேர்ந்த விஜயபாஸ்கர்(38), மணலூரை சேர்ந்த ரவீந்திரன்(34) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய முகமது ரபிக், செந்தில், நடனம், நட்ராஜ், பாலா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்