காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
|ஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஷாம் (வயது 17). இவர் நேற்று மாலை பண்ருட்டி கூட்டு சாலை அருகே கடைக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஷாமிடம் முகவரி கேட்பது போல நடித்து ஷாமை கடத்தினர். பின்னர் அவரை கடத்திய கும்பல் ஷாமின் வீட்டிற்கு உறவினராக வந்த பிரேம் கிங்ஸ்லியை (22) செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினர்.
பிரேம் கிங்ஸ்லி பணம் தருவதாக கூறியதையடுத்து அந்த கும்பல் பண்ருட்டி கூட்டு வழியாக வடக்கு பட்டுக்கு செல்லும் காட்டு பகுதிக்கு வரும்படி கூறினர். அவர் அங்கு சென்ற நிலையில் அவரையும் அந்த கும்பல் கடத்தி வைத்து கொண்டனர்.
பின்னர் பிரேம் கிங்சிலியின் சித்தப்பாவான பிரேம் நசீரை தொடர்பு கொண்ட அந்த கும்பல் தாங்கள் சொல்லும் கூகுள் பே எண்ணிற்கு பணம் அனுப்பினால் இருவரையும் விடுவிப்பதாக கூறினர். அவர்கள் அளித்த எண்ணிற்கு பிரேம் நசீர் ரூ.9 ஆயிரத்தை அனுப்பினார். பணம் அனுப்பிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரகடம் அடுத்த கண்டிகை பகுதியில் செயல்படும் ரீசார்ஜ் கடை என்பது தெரிய வந்தது. உடனடியாக பிரேம் நசீர் உறவினர்களுடன் கண்டிகைப்பகுதியில் ரீசார்ஜ் கடைக்கு சென்றார். பிரேம் நசீர் கூகுள் பேவில் அனுப்பிய பணத்தை பெறுவதற்கு வந்த ஒருவனை அவர்கள் பிடித்து காட்டுப்பகுதிக்கு பொதுமக்களுடன் சென்றனர்.
அவர்கள் வருவதை அறிந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. தப்பி ஓடிய 4 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் 4 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தல் கும்பலிடம் இருந்து பிரேம் கிங்ஸ்லி, மற்றும் ஷாம் ஆகிய 2 பேரையும் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு கடத்தலில் ஈடுபட்ட விக்னேஷ் (22) ஐயப்பன் (19) நடராஜன் (26) மணிகண்டன் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் போதையில் நடந்ததா? அல்லது பணத்திற்காக நடந்ததா? என விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.