பள்ளி சென்ற 2 குழந்தைகள் கடத்தல் - விருதுநகரில் அதிர்ச்சி
|விருதுநகர் அருகே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வக்கனாகுண்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதிகளுக்கு முகேஷ் மற்றும் பிருந்தா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கணவர் ரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஜான்சிராணி தற்போது வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
குழந்தைகள் இருவரும் தாயுடன் செல்ல மறுத்ததால் வக்கனாகுண்டில் உள்ள தாத்தா சுப்பையா பராமரிப்பில் உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் சம்பவத்தன்று தாத்தா வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் குழந்தைகள் 2 பேரையும் கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறிந்து அறிந்த தாத்தா சுப்பையா காரியாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் குழந்தைகளை கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.