தேனி
கத்தி முனையில் கடத்தல்... பணம், செல்போன் பறிப்பு:அச்சுறுத்தும் ஆட்டோ பயணங்கள்:டிரைவர் போர்வையில் களமிறங்கிய திருடர்கள்
|தேனி மாவட்டத்தில் ஆட்டோக்களில் நடக்கும் கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பிரசவத்துக்கு இலவசம் என்று எழுதப்பட்ட ஆட்டோக்கள் இன்னும் நகரில் உலா வருகின்றன. பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கும் உற்ற தோழனாக திகழ்வது ஆட்டோ டிரைவர்கள் என்றே கூறலாம். சமூகத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு என்று ஒரு சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி பஸ் சென்று விட்டாலும், ஆட்டோ இருக்கிறது என்ற நம்பிக்கையில் பலரும் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஆட்டோக்களில் தவற விட்ட நகை, பணத்தை பத்திரமாக போலீசாரிடமும், தவற விட்டவர்களிடமும் கொடுத்து பாராட்டு பெற்ற டிரைவர்கள் பலர். அன்றாடம் இதுபோன்ற நிகழ்வுகளை ஆட்டோ டிரைவர்கள் செய்து வருகின்றனர்.
ஆட்டோவில் செல்ல அச்சம்
அப்படி இருக்கும் சூழலில், சமீப காலமாக தேனி பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோவில் பயணம் செய்யவே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. தேனி நகரில் ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்களை விடவும், எந்த நிறுத்தங்களும் இன்றி உலா வந்து கொண்டு இருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகம். தேனி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களும் தேனியில் ஓடுகின்றன.
முறையான சீருடை அணியாமல் கைலி அணிந்து கொண்டும், ஆட்டோவில் சாதி அடையாளத்துடன் வாசகங்கள் எழுதி வைத்துக் கொண்டும் ஆட்டோ டிரைவர்கள் வலம் வருகின்றனர். மேலும், சரக்கு வாகனங்களில் கிளீனர் வைத்து ஓட்டுவது போல், ஆட்டோக்களிலும் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டும் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை ஓட்டி வருகின்றனர்.
இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து திரும்பும் பெண்கள் இதுபோன்ற ஆட்டோக்களில் ஏறுவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால், ஆவணங்களை சரியாக வைத்துக் கொண்டு, சீருடை அணிந்து, விதிகளை கடைபிடித்து ஆட்டோ ஓட்டுபவர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
கத்திமுனையில் கடத்தல்
ஆட்டோ டிரைவர்கள் உருவத்தில் வழிப்பறி திருடர்களும் உலா வருவது மக்களிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கடந்த 1-ந்தேதி கார் பஞ்சர் ஆனதால் கேரளாவை சேர்ந்த வியாபாரி தனது நண்பருடன் நடு வழியில் பரிதவிப்புடன் நின்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உதவி கேட்டார். அந்த ஆட்டோ டிரைவர் உதவி செய்வதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் தனது கூட்டாளியை செல்போன் மூலம் அழைத்தார். கூட்டாளியும் பாதி வழியில் ஆட்டோவில் ஏறிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரும் சேர்ந்து கத்தி முனையில், கேரள வியாபாரி உள்பட 2 பேரை கடத்திச் சென்று அவர்களை தாக்கி பணம், செல்போன், கைக்கெடிகாரம் ஆகியவற்றை பறித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர், அவருடைய கூட்டாளி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதியவரிடம் பணம் பறிப்பு
மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஒச்சானத்தேவர் (வயது 63) என்பவர் கடந்த 24-ந்தேதி இரவு தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு ஆட்டோவில் புறப்பட்டார். செல்லும் வழியில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர் ஆகியோர் ஒச்சானத்தேவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்துவிட்டு பாதி வழியில் இறக்கி விட்டுச் சென்றனர். அதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழிப்பறி மட்டுமின்றி, கஞ்சா, மதுபானம் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்ற செயல்களிலும் சில ஆட்டோ டிரைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக சில ஆட்டோக்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும், சட்டவிரோத செயல்களை சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆட்டோ டிரைவர்கள் போர்வையில் தற்போது திருடர்களும் களம் இறங்கி இருப்பதால் இரவு நேரங்களில் ஆட்டோக்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர்.
போலீஸ் அடையாள எண்
இதுபோன்ற செயல்களை தடுக்கவும், தேனி பகுதியில் ஓடும் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்யும் ஆட்டோக்களை எளிதில் நினைவில் வைத்து கொண்டு அடையாளம் காணும் வகையிலும் சிறப்பான ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதாவது, போலீஸ் துறை சார்பில் ஆட்டோக்களுக்கு அடையாள எண் வழங்கப்பட்டது. ஆட்டோக்களின் உரிமம், ஆவணங்கள், டிரைவரின் ஓட்டுனர் உரிமம் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து, அடையாள எண் வழங்கினர்.
இதனால், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் அத்தகைய அதிரடியான நடவடிக்கையால் முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் தேனி மாவட்டத்துக்குள் ஓட்டுவது அரிதாக காணப்பட்டது. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதன்பிறகு அதுபோன்ற அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளாமல் முடங்கியது. இதனால், போலீஸ் அடையாள எண்ணுடன் இயங்கும் ஆட்டோக்களை விடவும், அடையாள எண் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் அதிகமாகியுள்ளது.
ஒத்துழைப்பு கொடுப்போம்
இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு-
தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம் கூறும்போது, 'நான் 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு தேனியில் பணியாற்றிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், வாகன தணிக்கை செய்தபோது விதிகளை மீறிய டிரைவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்கினார். அப்போது அவர் வழங்கிய அறிவுரையை ஏற்று நான் காக்கி சட்டை, காக்கி பேண்ட் அணியத் தொடங்கினேன். பெயர் பேட்ஜ் அணிந்தாலும் இன்னும் நன்றாக இருக்கும் என்று அந்த அதிகாரி கூறியதை ஏற்று பெயர் பேட்ஜ் அணியத் தொடங்கினேன்.
ஆட்டோவின் சாவியை மறந்தாலும் சீருடை, பேட்ஜ் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. ஆனால், இன்றைக்கு கைலி அணிந்து கொண்டும், சட்டையில் பொத்தான்களை கழற்றி விட்டுக் கொண்டும் சிலர் ஆட்டோ ஓட்டுவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. போலீசார் இதற்கு ஆரம்ப நிலையிலேயே முடிவு கட்ட வேண்டும். போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்' என்றார்.
கடுமையான நடவடிக்கை
தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் கூறும்போது, 'நான் 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஆட்டோ டிரைவர்கள் என்றாலே மக்களிடம் ஒருவித நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சிலரின் செயல்பாடு உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் புதிது புதிதாக பலர் தேனியில் ஆட்டோ ஓட்டுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியது போல், வாகனங்களுக்கு போலீஸ் துறை சார்பில் அடையாள எண் வழங்கவும் முன்வர வேண்டும்' என்றார்.
அல்லிநகரத்தை சேர்ந்த முருகன் கூறும்போது, 'தேனியில் ஆட்டோக்களின் விதிமீறல்களை போலீசார் கண்டும், காணாது போல் இருப்பதாக தெரிகிறது. திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவரும் நபர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். அதுபோன்ற நபர்கள் ஆட்டோ ஓட்டுவது தெரியவந்தால், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவதற்கு என்று கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இரவில் இயக்கப்படும் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத ஆட்டோக்கள் ஓட்டுவதை அனுமதிக்கக்கூடாது' என்றார்.
உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்தானது
நேர்மையான டிரைவர்கள் இரவில் ஆட்டோ ஓட்டுவது என்பது போலீசாரின் ரோந்துக்கு நிகரானது என்பார்கள். ஆனால், டிரைவர்கள் போர்வையில் திருடர்கள் ஆட்டோ ஓட்டினால் அது மக்களின் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்தானது. போலீசார் இந்த பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.