10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு வலைவீச்சு
|கத்திமுனையில் மிரட்டி 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்கி (வயது 22). இவர், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை கத்தியை காட்டி மிரட்டி தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வீட்டுக்கு கடத்திச்சென்றார்.
பின்னர் அங்கு மதுபானத்தில் வெள்ளைநிற பவுடரை கலந்து மாணவிக்கு கொடுத்தார். அதை குடித்த மாணவி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் மாணவியை விக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
அதன்பிறகு அவரிடம் மாணவி பேச மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி, என்னுடன் பேசவில்லை என்றால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதுடன், தொடர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பள்ளியில் மாணவி சோர்வாக காணப்பட்டார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரித்தபோது தனக்கு நடந்த கொடுமைகளை கூறி மாணவி கதறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி சேலையூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனர்.