திருவள்ளூர்
காதல் தகராறில் துணை நடிகரை கடத்தி தாக்குதல் - காதலியின் உறவினர்கள் மீது புகார்
|ஊத்துக்கோட்டை அருகே காதல் தகராறில் துணை நடிகரை கடத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காதலியின் உறவினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே பட்டாபிராம் பம்பை சிந்துநகர் சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து பிரசாத் (வயது 26). சினிமாவில் துணை நடிகராக உள்ளார். இவர் புதுச்சேரியை சேர்ந்த துணை நடிகை ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த துணை நடிகை பூந்தமல்லியில் உள்ள தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே துணை நடிகைக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து நிச்சயம் செய்தனர். ஆனால் துணை நடிகை திருமணத்துக்கு மறுத்து துணை நடிகர் முத்து பிரசாத்தை திருமணம் செய்யப்போவதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகையின் குடும்பத்தினரும், நிச்சயம் செய்யப்பட்ட புது மாப்பிள்ளையும் சமாதானப்படுத்தி வந்தனர்.
ஆனால் துணை நடிகை திருமணத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் துன்புறுத்தப்பட்டதாக தெரிகிறது. இது பற்றி அவர் காதலினிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் துணை நடிகர் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் சமாதானம் பேச அழைத்தனர். காரில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டி ஏரி அருகே உள்ள பென்னலூர் பேட்டை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு துணை நடிகர் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பரை அழைத்து சென்று முத்து பிரசாத்தை சரமாரியாக 6 பேர் கொண்ட கும்பல் கட்டை மற்றும் கைகளால் தாக்கி கத்திமுனையில் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
முத்து பிரசாத்தை சரமாரியாக தாக்கியதால் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர் தாங்கள் இருக்கும் இடம் குறித்து மற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து துணை நடிகர் முத்து பிரசாத்தை தேடி உறவினர்கள் வந்ததும் அவரை அங்கேயே விட்டுவிட்டு கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. முன்னதாக முத்து பிரசாத்தை சட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வழிநெடுகளிலும் முதுகில் கட்டையால் கடத்தல் கும்பல் தாக்கியுள்ளனர்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு துணை நடிகர் முத்து பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. துணை நடிகையின் குடும்பத்தினர் மற்றும் துணை நடிகைக்கு நிச்சயம் செய்யப்பட்ட வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். காதல் தகராறில் துணை நடிகர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.