திருச்சி
காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தலா? போலீசார் விசாரணை
|காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம்:
கரூர் மாவட்டம், மண்மங்களத்தை அடுத்த கருப்பபாளையத்தை சேர்ந்தவர் கோபிகா (வயது 19). இவர் கிருஷ்ணமூர்த்தி(22) என்பவரை காதலித்து, சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி ஒரு வழக்கு சம்பந்தமாக திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள கோர்ட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு வர தாமதமானதால், அவரை செல்போன் மூலம் கோபிகா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், தானும், அஜய் என்பவரும் கோர்ட்டில் இருப்பதாகவும், பின்னர் வந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அஜய்க்கு போன் செய்தபோது, கிருஷ்ணமூர்த்தி காரில் சென்று விட்டதாகவும், தான் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து கோபிகா அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.