திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 19 மணி நேரத்தில் மீட்பு - இளம்பெண் கைது
|திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 30). இவருடைய மனைவி கமலினி (25). இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.அய்யம்பாளையத்தில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். கமலினிக்கு கடந்த 22-ந்தேதி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அதே வார்டில் உள்ள மற்றொரு பெண்ணுக்கு உதவியாளராக இருப்பதாக கூறி பெண் ஒருவர் கமலினியிடம் அறிமுகம் ஆனார். கமலினினியின் குழந்தை இங்குபேட்டரில் வைக்கப்பட்டு இருந்ததால் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் குழந்தையை எடுத்து வருவதற்கும், வார்டிலும் கமலினிக்கு உதவி செய்வது போலவும் அந்த பெண் பழகினார். நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் வழக்கம்போல தாய்ப்பால் கொடுத்துவிட்டு இங்குபேட்டரில் வைப்பதற்காக குழந்தையை அந்த பெண்ணிடம் கமலினி கொடுத்து அனுப்பினார். ஆனால் அந்த பெண் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையை கடத்திய பெண் திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்த விஜய் ஆனந்தின் மனைவி உமா (27) என்பது தெரியவந்தது. மேலும் உமாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது கடைசியாக விழுப்புரத்தில் செல்போன் சிக்னல் காண்பித்தது. அதன்பிறகு சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருப்பூரில் இருந்த விஜய் ஆனந்த்திடம் விசாரித்தபோது உமா, கள்ளக்குறிச்சியில் உள்ள தனது தோழி ராணி வீட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு தனிப்படையினர் விரைந்தனர்.
அங்கு நேற்று காலை 8 மணி அளவில் உமாவை பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே குழந்தையை கடத்திய உமாவையும், அவர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த அவரது தோழி ராணியையும் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 1 வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்த உமாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, அதன்பிறகு குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். குழந்தை ஏக்கத்தில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டுக்கு வந்துள்ளார். அங்கு ஏற்கனவே சிகிச்சையில் உள்ள பெண்ணுக்கு உதவியாளராக வந்துள்ளதாக நடித்து கமலினியிடம் பேச்சு கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தினார். அதன்பின்னர் குழந்தையை கடத்திச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
கடத்தப்பட்ட 19 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.