தர்மபுரி
பெரியாம்பட்டி அருகேவீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி காரில் கடத்தல்செங்கல் சூளை உரிமையாளர் மீது புகார்
|பெரியாம்பட்டி அருகே வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி காரில் வலுகட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றதாக செங்கல் சூளை உரிமையாளர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல் சூளையில் வேலை
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). இவருடைய மகன் முத்து. இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே ஒரு செங்கல் சூளை உரிமையாளரிடம் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் தாயும், மகனும் செங்கல் சூளையில் வேலை செய்து அந்த கடனை அடைத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடல் நிலை சீரானதும் மீண்டும் வேலைக்கு வருவதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.
மிரட்டி கடத்தல்
அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் நேற்று மாலை அடியாட்களுடன் பெரியாம்பட்டிக்கு வந்து உடனடியாக வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டி காரில் லட்சுமியை வலுகட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் முத்து நேற்று இரவு தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் செங்கல் சூளை உரிமையாளர் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி தனது தாயை கடத்தி சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.