< Back
மாநில செய்திகள்
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து: மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து: மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது

தினத்தந்தி
|
1 Oct 2022 2:27 PM IST

ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியது.

சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் தொடர்ந்து மற்ற சிலிண்டர்களும் வெடிக்க தொடங்கியது. இதையடுத்து குடோன் ஊழியர்கள் அலறியடுத்து பலத்த தீ காயங்களுடன் வெளியே ஓடினர்.

கியாஸ் சிலிண்டா குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் அங்கு இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32), நிவேதா (21), தமிழரசன் (18), ஜீவானந்தம், சண்முகபிரியன், ஆமோத்குமார் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் 7 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அமோத்குமார் (25), சந்தியா (21) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜீவானந்தம் (50) நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

கியாஸ் சிலிண்டர் குடோன் சாந்தி(48) பெயரில் உள்ளது. இவரது கணவர்

தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் (54) என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சாந்தி (48), அவரது கணவர் அஜய்குமார், ஜீவானந்தம் (46), மோகன்ராஜ் (38) பொன்னிவளவன் (45) ஆகியோர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அவர்களில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார், மோகன் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

குடோனில் இருந்து அனைத்து சிலிண்டர்களும் அகற்றப்பட்டது. கியாஸ் சிலிண்டர் குடோனுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் தலைமையில் போலீஸ்துறை, வருவாய் துறை, தடவவியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் அடுக்கி வைக்கப்படும் குடோன் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் இதுபோல் கியாஸ் சிலிண்டர் விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கியாஸ் குடோன்களை பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்