< Back
மாநில செய்திகள்
வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி - கேரள வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி - கேரள வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 May 2023 8:05 AM IST

வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் கைதானார். தலைமறைவான அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 46). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இவரது வங்கியில் கேரளாவை சேர்ந்த பிரணவ் (29) என்பவர் நகையை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பெற்றுச் சென்றார்.

பிரணவுடன் ஒரே அறையில் தங்கி வந்த அவரது நண்பர் சுபாஷ் என்பவரும் அதே வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் பெற்றுள்ளார்.

மறு பரிசோதனையில் பிரணவ் மற்றும் சுபாஷ் இருவரும் அடகு வைத்த நகைகள் போலி என தெரியவந்தது. இருவரும் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடகு வைத்து ரூ.5 லட்சத்து 23 ஆயிரத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதுபற்றி வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்தநிலையில் போலீசார் அறிவுரையின்பேரில் வெங்கட்ராமன் கேரளாவில் உள்ள பிரணவிடம் செல்போனில் போலி நகை குறித்து பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரணவ், வங்கியில் பணம் செலுத்தி விடுவதாகும். தன்னை விட்டுவிடுமாறும் கேட்டு பணத்துடன் சென்னை வந்தார். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பிரணவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரான சுபாசை தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே வேறு ஒரு வங்கியில் இதேபோல் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்துள்ளனர்.

அந்த வழக்கில் சுபாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரணவ் தலைமறைவாக இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ், மீண்டும் இந்த வங்கியில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் பிரணவ் கைதான நிலையில் சுபாஷ் தலைமறைவாகி விட்டார்.

மேலும் செய்திகள்