கன்னியாகுமரி
நாகர்கோவிலில் 20 பவுன் நகை கொள்ளை:தலைமறைவான 4 பேரை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது
|நாகர்கோவிலில் 20 பவுன் நகை கொள்ளை போன விவகாரத்தில் தலைமறைவான 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 20 பவுன் நகை கொள்ளை போன விவகாரத்தில் தலைமறைவான 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.
20 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவில் வேதநகர் மேலப்புதுத்தெருவை சோ்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 53), டிரைவரான இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு முகமது உமர் சாகிப்பின் மனைவி ஜாஸ்மின் மற்றும் மகள் உள்ளிட்டோர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். இதனால் வீட்டில் உமர் சாகிப் மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் முகமது உமர் சாகிப்பின் வீட்டுக்குள் பர்தா அணிந்த நிலையில் புகுந்த மர்ம கும்பல் அவரை தாக்கி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தது. அந்த சமயத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த ஜாஸ்மின் மற்றும் மகள் வீட்டுக்கு வரவே கொள்ளை கும்பல் காரில் தப்ப முயன்றது. எனினும் அக்கம் பக்கத்தினர் திரண்டு காரை மடக்கினர். இதைத் தொடர்ந்து காரை அங்கேயே விட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது. அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனிப்படை கேரளா விரைந்தது
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் இடலாக்குடி பரசுராம் தெருவை சேர்ந்த ரகீம் (வயது 33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தப்பி ஓடியவர்கள் அழகியபாண்டியபுரம் எட்டாமடையை சேர்ந்த கவுரி (36), இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர், கோட்டார் மேலசரக்கல்விளை மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சாா்லஸ், கோட்டார் இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகமது (35) மற்றும் மைதீன் புகாரி ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.
பின்னர் கவுரி, அமீர் ஆகிய 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அந்த வகையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான 4 பேரை பிடிக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் முதற்கட்டமாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தலைமறைவான 4 பேரும் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் தங்களது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். எனினும் அவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.