நீலகிரி
காரை திருடிய கேரள ஆசாமி கைது
|கூடலூரில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை திருடிய கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.
கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் கடந்த 6-ந் தேதி வீட்டின் முன்பு கேரள பதிவு எண் கொண்ட தனது காரை இரவில் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்த போது, கார் காணாமல் போனது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும். இதுகுறித்து முகமது ரபீக் கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் காரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கூடலூர் நந்தட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தடுத்து நிறுத்தியும், ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் பின்தொடர்ந்து சென்ற போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். மேலும் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியை சேர்ந்த சர்புதீன் (வயது 36) என்பதும், கோழிப்பாலத்தில் கார் திருடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கார் பறிமுதல் செய்யப்பட்டது.