முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் திட்டத்தை கேரளா அரசு கைவிட வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
|தமிழக தென் மாவட்ட மக்களின் அவசிய தேவையை புரிந்து புதிய அணை கட்டுமான திட்டத்தை கேரளா அரசு கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
முல்லை பெரியாறு அணை மூலம் தமிழக தென் மாவட்டங்களான தேனி; மதுரை; திண்டுக்கல்; சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டை பெற்று வருகிறது.
999 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்கான நீர் பங்கீடு நடந்து வரும் நிலையில் ...1979 ஆம் ஆண்டு முதல் இந்த அணை பலவீனமாக உள்ளது.. கீழ் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து உள்ளது என கேரளாவில் மாறி மாறி வரும் மாநில அரசுகள் கூறி வருவதுடன் பலமாக உள்ள இந்த அணையை இடித்து விட்டு கீழ்பகுதியில் ஒரு புதிய அணையை கட்டிட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் மேற்கண்ட மாவட்டங்களின் குடிநீருக்கு கூட திண்டாடும் நிலை ஏற்படும். இதற்கான நடவடிக்கையை கேரளா அரசு எடுக்கும் போதெல்லாம் தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வாதாடி வந்த நிலையில் தான்... உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வழங்கிய இரு தீர்ப்புகளில்.
கீழே உள்ள பேபி அணையை பலப்படுத்திட கேரளா அரசு ஒத்துழைக்க வேண்டும்; அதுவரை முல்லை பெரியாறு அணையில் 147 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கிக் கொள்ள வேண்டும்; பேபி அணை சீர் அமைப்பு பணிகள் முடிந்தவுடன் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இதுவரை 10.5 டி.எம்.சி; தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்து வந்த நிலையில் .. இந்த தீர்ப்புக்குபின் 7.65 டி.எம் சியாக குறைந்து போனது. இதனால் 1979 முதல் தென் மாவட்டங்களின் சாகுபடி பரப்பு சுமார் 1.25 லட்சம் ஏக்கர் தரிசாக கிடக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பேபி அணை சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என பல தடவை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கேரளா அரசு உரிய நிலையில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
இந்த நிலையில் தான்முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக மஞ்சமலை எஸ்டேட் அருகே ஒரு புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கடந்த ஜனவரி மாதமே ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் வனத்துறையிடம் கேரளா அரசு அனுமதி கேட்டு அனுப்பி இருக்கிறது.
இதனால் பாதிக்கப்படும் தமிழ்நாடு அரசின் கருத்தறியாமல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறான புதிய அணை கட்டுமானத்திற்கான முன்மொழிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது என்பது ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்காகும். இரு மாநில அரசுகளை; மக்களை மோத விடுகிற போக்கை ஒன்றிய அமைச்சகம் செய்துள்ளது.
இந்த அணைகட்டுமானத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பொது மக்களிடம் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய அணை கருத்துருவை எதிர்த்து தமிழக முதல்வர் அவர்களும் கேரளா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து கொள்வதுடன் .. தமிழக தென் மாவட்ட மக்களின் அவசிய தேவையை புரிந்து புதிய அணை கட்டுமான திட்டத்தை கேரளா அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.