கீழடி அகழாய்வில் முதல்முறையாக ஈமத்தாழியில் சூதுபவள மணிகள் கண்டெடுப்பு!
|முதன்முதலாக கொந்தகையில் ஈமத்தாழிக்குள் இத்தகைய சூதுபவள மணிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறினர்.
சிவகங்கை,
திருப்புவனம் யூனியனுக்குட்பட்ட கீழடியில் பல்வேறு கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது 8-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அங்கு இதுவரை நடந்த 3 கட்ட அகழாய்வுகளிலும் மொத்தம் 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறப்பதற்கு அதைச் சுற்றி அளவு எடுக்கப்பட்டு நூல்களால் கட்டி ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து, கொந்தகையில் ஈமத்தாழி ஒன்றிலிருந்து 29 சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. சூதுபவள மணிகள் பீப்பாய் வடிவத்தில் உள்ளன. அவை முற்காலங்களில் ஆபரணங்களாக கோர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினர்.
மேலும், ஒருவர் உயிரிழந்தபோது அவருடைய சொத்தாக இந்த மணிகள் இருந்திருந்தால் அவற்றை அவருடன் சேர்த்து ஈமத்தாழிக்குள் வைத்து புதைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
முதன்முதலாக, கொந்தகையில் ஈமத்தாழிக்குள் இத்தகைய சூதுபவள மணிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.