சிவகங்கை
கீழடி புறக்காவல் நிலையம்-சோதனை சாவடி-டி.ஐ.ஜி. துரை நேரில் ஆய்வு
|கீழடியில் புறக்காவல் நிலையம், சோதனை சாவடி அமைப்பது குறித்து டி.ஐ.ஜி. துரை நேரில் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்
கீழடியில் புறக்காவல் நிலையம், சோதனை சாவடி அமைப்பது குறித்து டி.ஐ.ஜி. துரை நேரில் ஆய்வு செய்தார்.
அருங்காட்சியகம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் மத்திய- மாநில அரசுகள் சார்பில் 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் எடுக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்காக கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 6 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளங்களிலும் பழங்கால பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். பின்பு 6-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு இலவசமாக திறந்து விடப்பட்டது. தினசரி சுமார் 1500 பேர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்..
கீழடியில் ஆய்வு
இந்த நிலையில் தினசரி பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், வாகனங்களும் அதிகமாக வருவதாலும் இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று மாலை டி.ஐ.ஜி. துரை, கீழடிக்கு நேரில் வந்தார். அவர் அங்கு புறக்காவல் நிலையம் அமைப்பதற்கு சில இடங்களை பார்வையிட்டும், மேலும் நான்கு வழிச்சாலையில் சோதனை சாவடி அமைய உள்ள இடங்களை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கொந்தகை வருவாய் ஆய்வாளர் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபு, ராஜேஷ்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.