< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
31 July 2023 6:26 PM GMT

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

முத்துமாரியம்மன் கோவில்

கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடித்திருவிழா கடந்த 16-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு காப்புக்கட்டுதல் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் வழிபாடுகளும், வாண வேடிக்கைகளுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ அலங்கார வாகனங்களில் அம்மன் வீதியுலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காய், கனி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க வாண வேடிக்கை, மங்கல வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.

ஆலங்குடி

ஆலங்குடி அருகே ஏ மாத்தூரில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை மாத்தூர் சித்தி விநாயகர் கோவிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி மற்றும் காவடி எடுத்து சுமார் 2 கி.மீட்டர் சுற்றி ஊர்வலமாக முத்துமாரியம்மன், காளியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்