< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்: காஜி நியமன தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சிபுரம்: காஜி நியமன தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
1 Jun 2022 9:38 AM GMT

காஞ்சிபுரம் மாவட்ட காஜி நியமன தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காஜி நியமன தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனம் செய்வது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் தலைமையில் 5 உலமாக்கள் மற்றும் 2 முக்கியஸ்தர்கள் என ஏழு உறுப்பினர்களைக் கொண்ட காஜி நியமன தேர்வுக்குழு அமைக்கப்படுவது தொடர்பாக கீழ்கண்டுள்ள நிபந்தனைகள் பின்வருமாறு,

தேர்ந்தெடுக்கப்படும் 5 உலமா உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது முஃப்தி படிப்பு படித்து இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

ஆலிம் : முஸ்லீம் மத நூலான குரான் மற்றும் அரபு மொழியில் 7 வருட முதுநிலைப் பயிற்சி பெற்றிருப்பவர்கள்

(அல்லது)

பாசில் : ஆலிம் படித்திருக்கக்கூடிய ஏழு வருட முதுநிலைப்பயிற்சியோடு கூடுதலாக ஒரு வருட பயிற்சி (7+1) பெற்றிருப்பவர்

(அல்லது)

முஃப்தி: ஏழு வருட முதுநிலைப் பயிற்சியோடு கூடுதலாக இரு வருட பயிற்சி படிப்பு பெற்றிருப்பவர் (7+2). இவர் ஒரு சட்ட நிபுணர் என்று அழைக்கப்படுவார்.

தேர்ந்தெடுக்கப்படும் இரு முஸ்லீம் பிரமுகர்கள் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராகவும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கரை உடையவராகவும் சமுதாயத்தில் நல்ல மனிதன் என்று பேசப்படுபவராகவும் இருத்தல் வேண்டும்.

காஜி நியமன தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மேற்கண்ட தகுதியுடைவர்களாக இருப்பின் விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்