< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கவசம் திறப்பு: ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க 1 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கவசம் திறப்பு: ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க 1 கி.மீ. தூரம் காத்திருந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
9 Dec 2022 2:41 PM IST

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு உள்ளதால் கொட்டும் மழையில் குடையை பிடித்தபடி பக்தர்கள் சுமார் 1 கி.மீ. தூரம் வரை நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மூலவர் சுயம்பு திருமேனியான ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாககவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டு இருந்த தங்க நாக கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி, தைலாபிஷேகம் நடைபெற்றது. முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புணுகு தைலத்தில் பொட்டு வைத்தும், பிரசாதமாக புணுகு தைலம் வழங்கப்பட்டது.

ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசரிக்க முடியும் என்பதால் இந்த அதிசய நிகழ்வை காண தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

2-வது நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தூரல் மழையிலும் குடையை பிடித்தபடி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேரடி வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ முகாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலேயே தான் வந்த காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களை பார்த்து அவர் கையெடுத்து கும்பிட்டு, பாதுகாப்பாக பத்திரமாக சாமி கும்பிட்டு விட்டு செல்லும்படி கூறினார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் ஊழியர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுவரை 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிவரை ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும். இன்று கடைசி நாள் என்பதால் பக்தகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்