ஈரோடு
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்- டாக்டர், பொதுமக்கள் ஆலோசனை
|கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்கும் வழிமுறைகள்- டாக்டர், பொதுமக்கள் ஆலோசனை
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர். பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கோடை வெப்பத்தில் இருந்து பிள்ளைகளை காத்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடு செய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்தும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொளுத்திவரும் கோடை வெயிலை பொதுமக்கள் எவ்வாறு சமாளித்து வருகிறார்கள் என்பது பற்றி சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:-
உடல் வறட்சி
ஈரோடு பிரபல தோல் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எல்.குகநாதன்:-
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் காலமாக இது உள்ளது. இந்த வெயில் கண்டிப்பாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சினை உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் உடல் வறட்சி ஏற்படும். எனவே கண்டிப்பாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வெயிலில் செல்லும் வேலை இருந்தால் ஒத்திப்போடுவது நல்லது. கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தால் "சன் ஸ்கிரீன்" கிரீம் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் தோல் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு வேர்க்குரு பிரச்சினை வரும்.
வெயிலை தவிர்ப்பது நல்லது
பழச்சாறு அதிக அளவில் குடிக்க வேண்டும். இது வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். வெயில் காரணமாக அதிக வியர்வை வெளியேறும். இதனால் உடல் எரிச்சல் வரும். அதிக வியர்வை சுரப்பால் தேமல் வரும் வாய்ப்பும் உண்டு. அதுமட்டுமின்றி இந்த வெயில் காலத்தில் படர் தாமரை, பூஞ்சை நோய்கள் உடலை தாக்கும். தோல் நிறமாற்றம், முகப்பரு ஆகியவை கடும் வெயில் ஏற்படுத்தும் பாதிப்புகளாகும். எனவே வெயிலை தவிர்ப்பதே சிறந்தது.
இதுபோல் குளிர்சாதன வசதி கொண்ட அறைகளில் இருந்து வெளியே வருபவர்கள் உடனடியாக நேரடியாக வெயில் படும் இடத்துக்கு செல்லக்கூடாது. அது பல்வேறு புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். அறையில் இருந்து வெளியேறி, சிறிது நேரம் நிழலில் அமர்ந்து விட்டு வெயிலுக்கு செல்ல வேண்டும். இன்னும் 10 அல்லது 15 நாட்கள் வெயிலை தவிர்ப்பது நல்லது.
தலையில் பொடுகு
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் எஸ்.ராதிகா சங்கர்:-
வெயில் காலத்தில் பொதுவாகவே தோல் நிறம் மாறுதல் பிரச்சினை வரும். தலையில் வியர்வை சுரப்பதால் பொடுகு அதிகமாகும். எனவே தலை சுத்தம் அத்தியாவசியமாகும். தினசரி தலைக்கு தண்ணீர் ஊற்றி தரமான ஷாம்புகள் போட்டு குளிப்பது நல்லது. குறைந்த பட்சம் வாரத்துக்கு 3 முறையாவது தலையை கழுவ வேண்டும். இது முகப்பரு வருவதை தடுக்கும்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவ நிபுணர்களே ஆலோசனை தருகிறார்கள். எனவே அதை பின்பற்ற வேண்டும்.
உடல் சூட்டை குறைக்க...
முகத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட முகக்கிரீம்களை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு, வெள்ளரிக்காய் என்று பல்வேறு காய்கறிகளையும் சிறிதளவு எடுத்து கிரீமாக அரைத்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் 'பேஸ் பேக்'-காக வைத்து தண்ணீரில் கழுவி வர வேண்டும்.
உடல் சூட்டை குறைக்கும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது தக்காளி வெட்டி கண்களில் 10 நிமிடம் வைக்கலாம். காலை மற்றும் மாலையில் இதுபோன்று செய்வது உடலுக்கு நல்லது. வெயிலில் பணி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை முகத்தில் தண்ணீர் தெளித்து குளிரவைத்து கழுவ வேண்டும். முகத்தில் எண்ணை பசை ஏற்படுவதை தடுக்கவும், தூசு படிவதை தடுக்கவும் இது உதவும். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்கிறபோது தண்ணீர் விளையாட்டு மையங்களில் உள்ள குளோரின் கலந்த தண்ணீரில் வெயில் நேரத்தில் குளித்து விளையாடுவது நல்லதல்ல.
நுங்கு ஜூஸ் விற்கும் என்ஜினீயர்
ஈரோடு மூலப்பட்டறை சம்பத் ரோட்டில் தள்ளுவண்டியில் நுங்கு கடை வைத்திருக்கும் என்ஜினீயர் ஆனந்த் தீர்த்தகிரி:-
நான் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். கல்லூரியில் வளாகத்தேர்வு மூலம் பணியும் கிடைத்து விட்டது. ஆகஸ்டு மாதம் பணியில் சேர கூறி உள்ளனர். ஆனால், இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்வது என்று யோசித்தேன். எனது தந்தை தீர்த்தகிரி தள்ளுவண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வந்தார்.
எனக்கு கல்லூரி தேர்வு முடிந்ததும் நான், அப்பாவின் தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு இங்கு வந்து முலாம்பழம் வியாபாரம் செய்தேன். சிறிதளவு நுங்கும் வைத்திருந்தேன். திடீரென்று மழை காரணமாக முலாம்பழம் வரத்து நின்று விட்டது. எனவே நுங்கு மட்டும் வியாபாரத்துக்கு வைத்திருந்தேன். அப்போதுதான் நுங்கு ஜூஸ் போடும் எண்ணம் வந்தது. சிறுவயதில் அம்மா கவிதா எனக்கு நுங்கு ஜூஸ் கொடுத்து இருக்கிறார். அவரிடம் செய்முறை கேட்டு நானும் நுங்கு ஜூஸ் போட்டு விற்பனை செய்ய தொடங்கினேன். இப்போது தினசரி ஏராளமானவர்கள் தேடி வந்து நுங்கு ஜூஸ் குடிக்கிறார்கள். வெயில் காலத்துக்கு ஏற்ற குளிர்பானமாக இது உள்ளது. உடலுக்கும் நல்லது.
மின் கட்டணம்
ஈரோடு கே.கே.நகரை சேர்ந்த குடும்ப தலைவி விஜி அசோக்குமார்:-
பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவிலும் வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது. வெயிலில் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. எனவே அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் கண்டிப்பாக வெயிலில் சென்றால்தான் குடும்பத்தையே நடத்த முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரசாயன குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறு, இளநீர், கரும்புச்சாறு, நுங்கு, பதனீர் சாப்பிடலாம்.
தற்போதைய நிலையில் எவ்வளவு பழச்சாறு குடித்தாலும் தாகம் அடங்காது. வெயிலில் செல்பவர்களுக்கு இப்படி பிரச்சினை என்றால், வீட்டில் இருக்கும் பெண்களும் கடுமையாக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாத சூழலில் இருக்கிறார்கள். கோடை காலத்தில் மின்விசிறிகள், குளிர்சாதன எந்திரங்கள் அதிக நேரம் இயங்குவதால் மின்சார கட்டணமும் உயர்கிறது. வெப்பம் உடல் ரீதியாக பாதிக்கிறது என்றால் மின்கட்டணம் பொருளாதார ரீதியாக பாதிக்கிறது. எனவே இயற்கை முறையில் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கொடிவேரி அணைக்கு...
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் செங்கோட்டையன் நகரை சேர்ந்த விஷ்ணு:-
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நான் கொடிவேரி அணைக்கு அடிக்கடி சென்று குளித்து வருவேன். தற்போது கோடை காலமாக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் கொடிவேரி அணையில் இலவச கழிப்பிடங்கள், உடைமாற்றும் அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. ேகாடை வெப்பத்தை தணிக்க இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அடிப்படை வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கொடிவேரி அணைக்கு சிறப்பு நிதியை அரசு ஒதுக்கி சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.