ஈரோடு
ஈரோடு நாடார் மேட்டில் வீடுகளுக்கு இடையே ஓடும் சாக்கடை: அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள்
|ஈரோடு நாடார் மேட்டில் வீடுகளுக்கு இடையே ஓடும் சாக்கடை: அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள்
பொது சுகாதாரம்
ஒரு வீதியில் ஒரு ஆண்டுக்கு முன்பு தார் ரோடு போடப்பட்டது. ஆனால், அதை ஒட்டிய வீதிகள், சந்துகளுக்கு எந்த பணிகளும் செய்யப்படவில்லை. மற்றொரு சாலையில் எந்த பணிகளும் செய்யப்படாமல் குறுகலாக மாறி ஒரு சந்து போல இருக்கிறது. பொதுசுகாதாரம் சிறிதளவும் இல்லாத ஒரு பகுதியாக இது இருக்கிறது.
நாடார் மேடு பகுதியில் ஓடும் பெரிய சாக்கடை கால்வாய், இந்த பகுதி வழியாக நுழைந்து, 2 கட்டிடங்களின் நடுவில் சென்று அடுத்த கால்வாயில் கலக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் ரோடு ஒரு பக்கம் உடைந்து அதில் புல் முளைத்து புதராக கிடக்கிறது. அதே ரோட்டின் இன்னொரு பகுதியில் புல் முளைத்து புதர் மண்டிக்கிடக்கும் இடத்தில் பாம்புகள் அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். வாடகைக்கு வருபவர்கள் வசதிகள் இல்லை என்றால் வேறு இடத்துக்கு சென்று விடுகிறார்கள். சொந்த வீட்டுக்காரர்கள் எங்கே செல்வோம் என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்கள் அந்த பகுதி மக்கள். மொத்தத்தில் அடிப்படை வசதி இன்றி தவிக்கிறார்கள் பொதுமக்கள். இது குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
விஷக்காய்ச்சல்
இல்லத்தரசி எஸ்.லலிதா:-
40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே குடியிருந்து வருகிறோம். பூந்துறை சாலையை உயர்த்தப்பட்டதால் நாங்கள் குடியிருக்கும் பகுதி தாழ்வாக மாறிவிட்டது. சாக்கடை கால்வாயில் செல்லும் கழிவுகள், எங்கள் பகுதிக்குள் வந்து விடுகிறது. இதனால் இங்கு கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட விஷக்காய்ச்சல்கள் எங்கள் பகுதியில்தான் முதலில் வருகிறது. அந்த அளவுக்கு எங்கள் வீடுகளை சுற்றி சாக்கடையாக உள்ளது.
30 நிமிடங்கள் மழை பெய்தால் இங்குள்ள வீடுகளுக்குள் முழுமையாக தண்ணீர் புகுந்து விடும். இதனால் வாடகைக்கு வசித்தவர்கள் பலரும் வீடுகளை காலி செய்து விட்டனர். தரை தள வீடுகளில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று சொந்த வீட்டுக்காரர்களும் மாடிக்கு சென்று விடுகிறோம். நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எங்களை மாநகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவே கருதுகிறோம்.
அச்சம்
குடும்ப தலைவி எஸ்.அலிமா:-
எங்கள் பகுதிக்கு சாலை போடப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. கான்கிரீட் சாலை போட்ட பிறகு பல்வேறு தேவைகளுக்காகவும் பல முறை உடைத்துவிட்டனர். பின்னர் சரியாக செப்பனிடாமல் விட்டு விட்டனர். எனவே சாலையில் புல் முளைத்து விட்டது. சாலையையொட்டி பெரிய அளவிலான சாக்கடை கால்வாய் உள்ளது. அதற்கு தடுப்புச்சுவர் இல்லை. குழந்தைகள் விளையாடும்போது தவறி விழுந்து விடுகிறார்கள். பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. மழை பெய்தால் தண்ணீர் சாக்கடையுடன் கலந்து வீட்டுக்குள் வருவதுடன், பூரான், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டுக்குள் வந்து விடுகின்றன. மழை வந்தாலே மிகுந்த அச்சத்துடன் தான்இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீதியில் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி வீட்டை சூழ்ந்து கொள்ளும். ஆனால் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் அதிக ஓட்டுகள் இல்லை என்பதால் புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அவலம்
அதே பகுதியை சேர்ந்த பி.சதீஸ்குமார்:-
சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சாக்கடை கால்வாய் கிடையாது. இப்போது சாக்கடை செல்லும் கால்வாயானது, வாய்க்கால் தண்ணீர் உபரியாகும்போது வரும் கசிவு நீர் செல்வதற்கானதாகும். ஆனால் நாடார் மேடு சாலை உயர்த்தப்பட்டபோது, மெயின் சாக்கடை வாய்க்கால் ஆழமானது. எனவே சாக்கடை வாய்க்காலில் கழிவு அதிகமாக வருவதால் அது மழை நீர் வடிகாலில் செல்கிறது. அப்படி போனாலும் பரவாயில்லை. இந்த கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், சிறிய அளவில் தண்ணீர் வந்தாலே சாக்கடை பொங்கி வீடுகளுக்குள் வந்து விடுகிறது. துர்நாற்றம் அதிகமாக இருப்பதாலும், கொசுத்தொல்லையாக இருப்பதாலும் இங்கு அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். உடைந்து கிடக்கும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அவலமும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
புறக்கணிப்பு
இதுபோல் இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி கழிவுகளும் வீடுகளை ஒட்டி உள்ள கழிவு நீர் ஓடையில் விடப்படுகிறது. வீட்டு கழிவுகளும் வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை தூய்மை பணியாளர்கள் கழிவுகளை அள்ளி வீடுகளுக்கு முன்பு போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.
அதை சுத்தம் செய்ய தனியாக குடியிருப்பு வாசிகள் பணம் கொடுக்க வேண்டியது உள்ளது என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள். பொதுவாக நாடார் மேடு நேருஜி வீதிகளை சுற்றி வந்தால் அனைத்து சந்து மற்றும் கிளை ரோடு பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்படும் பகுதிகளாகவே உள்ளது என்பது அந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.