ஈரோடு
கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா?- பெற்றோர், ஆசிரியர் கருத்து
|கோடை விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து வருகிறதா?- பெற்றோர், ஆசிரியர் கருத்து
வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.
தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கங்கோ செல்கிறார்கள். இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
ஈரோடு மதரசா பள்ளிக்கூட ஆசிரியை எம்.காயத்திரி அன்னபூரணி:-
அறிவியல் வளர்ச்சி பெற்றாலும், பொருளாதார நிலையில் வாழ்க்கைத்தரம் உயர்ந்தாலும் மனித மனம் மிகப்பெரிய மாறுதலை அடைவது இல்லை. ஆசைகள், இன்பங்கள், விருப்பு, வெறுப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதுபோலவே குழந்தைகள். சிலர் பெற்றோர்களாக மாறிவிட்டதும், குழந்தைகளுக்கான ஆசைகளுக்கு அணை போட தொடங்குகிறார்கள். தங்கள் ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். பொருளாதார சூழலால் குடும்பங்களை பிரிந்தவர்கள், கூட்டுக்குடும்ப முறை தகர்ந்து தனிக்குடித்தனங்களுக்கு மாறியவர்கள் என்று இன்றைய குடும்பங்கள் அனைத்தும் தனித்தனியாகவே உள்ளன. இதனால் பழங்காலத்தை போன்று இல்லாமல் உறவினர்கள் எண்ணிக்கை குறைந்து போயிருக்கிறது.
நான் எனது மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் பேசும்போது கோடை காலத்தை பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளை அவர்களின் தாத்தா, பாட்டி, உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்துச்செல்லுங்கள் என்றுதான் கூறுவேன். குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என்பது கருத்து.
அப்படி அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருந்தாலும், பொருளாதார சூழல் அவர்களின் ஆசைகளுக்கு எதிராகத்தான் இருக்கிறது. உறவினர்கள் வீடுகளில் சென்று தங்குவது என்றால் ஆகும் செலவு. தாத்தா-பாட்டி இருக்கும் ஊருக்கு சென்று சேர, அங்கு தங்கி இருக்க, மற்ற உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல ஆகும் செலவை நினைத்தாலே பல குடும்பங்கள் அச்சத்தில் உள்ளன. அப்படியே போகவேண்டும் என்று நினைத்தாலும் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு விடுமுறை கிடைப்பதில்லை. கூட்டுக்குடும்ப முறைகள் இருந்தபோது, அப்பா-அம்மா உடன் வரவில்லை என்றாலும் சித்தப்பா, பெரியப்பா, மாமா என்று யாராவது குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இப்போது ஆசை அதிகம் இருந்தாலும் நடைமுறை சிக்கலால் எல்லா குழந்தைகளுக்கும் தாத்தா-பாட்டி வீடு செல்லும் ஆசை நிறைவேறுவது இல்லை.
சமூக ஊடகங்களால் தனிமை
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். பணியாளர் ஜெ.தாமஸ் முத்துச்செல்வன்:-
நாங்கள் படிக்கிற காலத்தில் கோடைவிடுமுறை எப்போது விடப்படும் என்று ஆர்வமாக இருப்போம். தாத்தா-பாட்டி வீட்டுக்கு சென்று விட்டால், பெரியப்பா, சித்தப்பா, மாமா என்று அனைவரின் குழந்தைகளும் வருவார்கள். கோடைகாலம் விளையாட்டு காலமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உறவு முறை வைத்து அழைத்து மகிழ்வோம். இதனால் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் அந்த உறவுகள் இன்றும் தொடர்கிறது. இன்னும், அந்த காலத்தில் சமூக ஊடகங்கள் கிடையாது. வெயிலில் விளையாடி, மழையில் குளித்து, கிணற்றில் நீச்சல் அடித்து, வயலில் குதித்து விளையாடினோம். அதற்கு உறவுகள் உறுதுணையாக இருந்தன.
இப்போது கோடை விடுமுறை வந்து விட்டால் குழந்தையை என்ன சிறப்பு முகாமில் சேர்த்து விடலாம் என்ற மனநிலைக்கு பெற்றோர்கள் சென்று விட்டனர். குழந்தைகளும் சமூக ஊடகங்களில் மூழ்கிவிட்டனர். உறவினர்களின் முக்கியத்துவத்தை பெற்றோர் சொல்லிக்கொடுக்காததால், தனிமையில் இருப்பதையே விரும்புகிறார்கள். உறவினர் யார் அதிக மதிப்பெண் வாங்கினாலும் மகிழ்ச்சி அடையும் சமூகமாக இருந்தது அந்தகாலம். நம் குழந்தை மட்டுமே முதலிடத்துக்கு வர வேண்டும் என்று ஒரு நாளைக்கூட வீணாக்காமல் பயிற்சிகளுக்கு அனுப்புவது இந்தகாலம். இதனால் குழந்தைகள் உறவுகளை இழக்கிறார்கள். அப்படியே கோடை விடுமுறையை கொண்டாட வேண்டும் என்றால் இன்ப சுற்றுலாவுக்கு செல்கிறார்கள். தற்போது பலர் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவும், அல்லது வருபவர்களை வரவேற்கவும் யாரும் விரும்புவதில்லை என்றே தெரிகிறது.
பாரம்பரிய நிகழ்வுகள்
நாதகவுண்டம்பாளையத்தை சேர்ந்த எம்.மாலதி:-
எங்கள் சொந்த ஊர் மேட்டூர். எனது கணவர் கட்டிட வேலை செய்து வருகிறார். எனது மகன்களின் படிப்புக்காக நான் நாதகவுண்டம்பாளையத்தில் வந்து குடியிருக்கிறேன். எனது மகன்கள் 5-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு முடித்து இருக்கிறார்கள். அவர்களை நான் எங்கேயும் அழைத்துச்செல்வது இல்லை. எனது தந்தை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் தோட்டம் வைத்து இருக்கிறார். எங்கள் சிறு வயதில் எனது தம்பியை அங்கும் இங்குமாக அலைத்து அவனது படிப்பே வீணாகி விட்டது. அப்படிப்பட்ட ஒரு நிலை எனது குழந்தைகளுக்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் குடியிருந்து வருகிறேன்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது தந்தையின் தோட்டத்துக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு நாளில் திரும்பி விட்டோம். அப்போது அங்குள்ள மரங்கள், செடிகளை பார்த்து மகன்கள் மீண்டும் அங்கே சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். இதுபோல் மேட்டூர் அணை பற்றியும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே இந்த விடுமுறையில் மேட்டூர் அணைக்கும், எங்கள் தந்தையின் தோட்டத்துக்கும் அழைத்துச்செல்ல முடிவு செய்து இருக்கிறேன். அங்கு தென்னை மரம் முதன் முதலாக தேங்காய் வெட்டும் பூஜை நடக்கிறது. கர்ப்பிணிகளுக்கு செய்யும் சடங்குகள் செய்து தேங்காய்கள் இறக்குவார்கள். நாங்கள் செல்லும்போது அதை செய்வதாக அப்பா கூறி உள்ளார். அதுவும் எனது மகன்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். விடுமுறையை உறவினர்களுடன், பாரம்பரிய நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும் வகையில் கழிப்பது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
சுகமே தனி தான்
சென்னிமலையை சேர்ந்த பூபதி - புவனேஸ்வரி:-
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் தாத்தா-பாட்டி மற்றும் உறவினர் வீட்டுக்கு செல்ல எப்போது விடுமுறை விடுவார்கள் என்று எதிர்பார்த்து இருப்போம். எங்கள் மகள் கனிஷ்கா பிறந்த பிறகு ஓரிரு வருடங்கள் அவளையும் விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்கு நாங்கள் அழைத்து சென்றதுண்டு. ஆனால் செல்போன்களில் நவீன மாற்றங்கள் வந்ததால் நினைத்த நேரத்தில் உறவினர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசுவதுடன், புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்ப முடிவதால் உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது குறைந்துவிட்டது. நேரடியாக உறவினர்கள் வீட்டுக்கு சென்று பேசும்போது அவர்களின் வேலை கெடும். ஆனால் செல்போனில் பேசினால் வேலையை பார்த்து கொண்டே பேசலாம். அந்த வகையில் நவீன வளர்ச்சி நமக்கு உதவியாக இருக்கிறது. அதே சமயம் என்னதான் நவீன வளர்ச்சி இருந்தாலும் விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்கு சென்று ஒன்று கூடி உண்டு மகிழும் சுகமே தனிதான்.
உறவினர் வீடுகளுக்கு செல்வதை கைவிட மாட்டோம்
பெருந்துறை அருகே உள்ள நரிப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்- திலகவதி தம்பதி மற்றும் அவர்களது மகள்கள் நீலாவதி, மலர்மதி:-
35 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா மட்டுமே பொழுது போக்கு என்று இருந்த நிலைமை, தற்போது அப்படி இல்லை. நவீன யுகத்தில் எண்ணற்ற பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டன. அன்றைக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் விடுமுறை என்று வந்துவிட்டால், அளவில்லா ஆனந்தத்துடன் மாமா வீடு, அத்தை வீடு, சித்தி- சித்தப்பா, பெரியப்பா வீடு, அம்மாயி வீடு என்று குதூகலத்துடன் சென்று விடுவோம். இன்றைக்கும் அந்த உணர்வுகள் எங்களை விட்டு விலக வில்லை. ஆயிரமாயிரம் பொழுது போக்கு அம்சங்கள் எங்களை சுற்றிலும் இருந்தாலும், உறவினர் வீடுகளுக்கு விடுமுறை நாட்களில் நாங்கள் சென்று வருவதும், அவர்களுடன் பிரியமாக பேசி மகிழ்வதும், இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காலங்கள் மாறினாலும், உறவுகளை தேடிச் சென்று அவர்களுடன் நாள் கணக்கில் இருப்பதை எப்போதும் கைவிட மாட்டோம். அதில் கிடைக்கும் ஆனந்தம், வேறு எதிலும் கிடைப்பது இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.