ஈரோடு
திறக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வருமா?- வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
|திறக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வருமா?- வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து
மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோடு மாவட்டம் ஜவுளிக்கும் புகழ் பெற்றது. விவசாயத்துக்கு அடுத்த பிரதான தொழிலாக ஜவுளி உள்ளது.
கனிமார்க்கெட்
ஈரோடு மாநகரின் மத்திய பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஈரோடு நகராட்சி தலைவராக ஈ.கே.எம்.அப்துல்கனி இருந்தபோது தனது சொந்த நிலத்தை இந்த மார்க்கெட்டுக்கு கொடுத்ததால், ஈ.கே.எம்.அப்துல்கனி மார்க்கெட் என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த மார்க்கெட்டில் சுமார் 230 தினசரி கடைகளும், 720 வாரச்சந்தை கடைகளும் செயல்பட்டு வந்தன. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு கூடும் வாரச்சந்தை மறுநாள் முழுவதும் நடைபெறும். இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கடைகள் அமைப்பது வழக்கம். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் துணிகளை விற்பனை செய்வதற்காக 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகிறார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து மொத்தமாக ஜவுளிகளை வாங்கி செல்கிறார்கள். தீபாவளி போன்ற பண்டிகை காலத்தின்போது வாரச்சந்தை களைகட்டி காணப்படும். இந்த கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடைக்காரர்கள் செலுத்தி வருகிறார்கள்.
பொது ஏலம்
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.60 கோடி செலவில் 4 தளங்களுடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதற்காக அங்கிருந்த பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டு, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் 292 கடைகள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வந்தபோது இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.
திறப்பு விழா கண்டு 7 மாதங்களுக்கு மேலாகியும் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வணிக வளாகம் கட்டப்படும் முன்பே புதிய கடைகள் கட்டியபிறகு, கனிமார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிஇருந்தனர்.
ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டதால், ஜவுளி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், கடைகளை ஏலம் எடுப்பவர்கள் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும், குறைந்தபட்ச வாடகை ஒரு கடைக்கு ரூ.31 ஆயிரத்து 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது வியாபாரிகளுக்கு பேரதிர்வை கொடுத்தது.
ஏலம் ஒத்திவைப்பு
சிறு வியாபாரிகளான அவர்களால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்றும், வைப்பு தொகையை ரத்து செய்துவிட்டு வாடகையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் பொது ஏலமும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த கனிமார்க்கெட் புதிய வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பார்ப்போம்.
அமைச்சர்களிடம் கோரிக்கை
ஈரோடு கனிமார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.நூர்முகமது:-
சிறு வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொடுப்பதற்காக மத்திய அரசின் மானியத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் வருவாய் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏலம் விட முயற்சி எடுத்தது. எனவே அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். அவர்களும் உரிய பரிசீலனை செய்து எங்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்து இருக்கிறார்கள்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வும் எங்க ளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக கூறிஉள்ளார்.
கோரிக்கைகள்
சங்க துணைத்தலைவர் கே.செல்வராஜ்:-
புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் தரைதளத்துக்கு ரூ.8 லட்சமும், முதல் தளத்துக்கு ரூ.6 லட்சமும், 2-வது தளத்துக்கு ரூ.4 லட்சமும் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
எங்களுக்கு வைப்பு தொகை நிர்ணயிக்க கூடாது என்றும், கீழ் தளத்துக்கு ரூ.8 ஆயிரம், முதல் தளத்துக்கு ரூ.5 ஆயிரம், 2-வது தளத்துக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வாடகை வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
இதுதொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.
அனுமதி
வியாபாரி இந்திராணி:-
நான் கடந்த 35 ஆண்டுகளாக கடை அமைத்து உள்ளேன். மாதந்தோறும் ரூ.1,080 வாடகையாக மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறேன். புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டால் ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் ரூ.8 லட்சம் வைப்பு தொகையை எங்களால் எப்படி கொடுக்க முடியும்? எனவே எங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு தொடர்ந்து இதே பகுதியில் வியாபாரம் செய்து கொள்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும்.
விலை உயர்வு
மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த எஸ்.கலா:-
நான் கனிமார்க்கெட்டில் வழக்கமாக ஜவுளிகளை வாங்கி வருகிறேன். அனைத்து துணிகளும் கிடைப்பதாலும், குறைந்த விலையில் இருப்பதாலும் இங்கே வாங்குகிறோம். தற்போது புதிய வணிக வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு வாடகை அதிகமாக வசூலித்தால் அதற்கான தொகையை ஜவுளியின் விலையில்தான் சேர்க்க நேரிடும். இதனால் ஜவுளியின் விலையும் உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஜவுளி விலை உயராத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.