< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
5 April 2023 2:49 AM IST

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து

மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத்தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள். சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

தொழிலை அழித்துவிடு்ம்

பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் டி.கே.சுப்பிரமணியன்:-

சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெற்றால் மட்டும் போதாது, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். இந்த கட்டண உயர்வு, லாரி தொழிலை முற்றிலும் அழித்துவிடும். கட்டண உயர்வுக்கு முன்னதாக, தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். அதை ஒட்டி செல்லும், சர்வீஸ் ரோடுகளை தார் ரோடாக மாற்றி, விபத்துகள் குறைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சா வடியை சுற்றியுள்ள உள்ளூர் வாசிகளின் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியே சென்று வர மாதாந்திர அடிப்படையில் குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பெருந்துறையில் இருந்து செங்கப்பள்ளி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடுகளை உடனடியாக அமைக்க வேண்டும்.

என்ன நியாயம்?

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ் என்பவர் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கூறியதாவது:-

நான் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறேன். வங்கியின் மூலம் கடன் பெற்று, இந்த லாரியை வாங்கி தொழில் செய்து வரும் எனக்கு, சுங்க கட்டண உயர்வு என்பது பெரும் சுமையாக மாறிவிட்டது. முன்பு கோவையில் இருந்து பெருந்துறை வரை வர 2 சுங்கச்சாவடி கட்டணம் ரூ.180 மட்டுமே இருந்தது. ஆனால் இன்று கோவையில் இருந்து எனது லாரியை விஜயமங்கலம் சுங்கச்சாவடி வரை ஓட்டி வந்தபோது சுங்க கட்டணம் ரூ.280 ஆக உயர்ந்து விட்டது. லாரியில் ஏற்றப்பட்டுள்ள சரக்கை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொண்டு போய் நான் இறக்க வேண்டும். அதுவரை வழியிலுள்ள எத்தனை சுங்கச்சாவடிகளுக்கு சுங்கக் கட்டணம் கட்டுவது? இந்த நிலை இப்படியே நீடித்தால் லாரி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்குத்தான் செல்லவேண்டும் ஏற்கனவே லாரிகளுக்கு சாலை வரி, இன்சூரன்ஸ் ஆகியவை உயர்த்தப்பட்டு விட்டன.. லாரியை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எந்த வழியில் நியாயம்?

பராமரிப்பில்லாத நெடுஞ்சாலை

சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சவிதா:-

நான் ஈரோடு திண்டல் பகுதியில் வசித்து வருகிறேன். இன்று காலை கோவை விமான நிலையத்திலிருந்து எனது மகளை அழைத்துக் கொண்டு, காரில் திண்டல் செல்கிறேன். கோவையிலிருந்து பெருந்துறை வரை காரில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். தேசிய நெடுஞ்சாலை முழுவதும் முறையாக ரோடு போடாமல் குண்டும், குழியுமாக உள்ளது. ஆங்காங்கே திட்டு திட்டாக பேட்ஜ் ஒர்க் (பராமரிப்பு) செய்துள்ளார்கள். சற்று வேகமாக ஓட்டினால் கார் மிகவும் அதிர்கிறது.

வாகனங்கள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் செல்லத்தான் 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் கோவையில் இருந்து சேலம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் செல்ல தகுதியற்றதாக இருக்கிறது. மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் முதலில் தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதன் பிறகு, சுங்க கட்டண உயர்வுகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு

ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் டி.எஸ்.குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் 24 சாவடிகள் அனுமதிக்கப்பட்ட காலஅவகாசம் முடிந்தும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் கட்டண உயர்வை தடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் மக்களைப்பற்றி சிந்திக்காமல் அவ்வப்போது சுங்கக்கட்டணம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணஉயர்வை மேலோட்டமாக பார்த்தால் லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் மட்டும் பாதிக்கப்படுவதுபோன்று தோன்றும். நாங்கள் எங்கள் கையில் இருந்து முதலில் பணத்தை செலுத்தினாலும், அது வாடகை உயர்வு, அதன் மூலம் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வு என்று ஒட்டு மொத்தமாக மக்களின் தலையில்தான் வந்து சேரும். எனவே சாதாரண சுங்கக்சாவடி கட்டண உயர்வுதானே என்று விட்டுவிட்டால் அதனால் முழுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். குறிப்பாக சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ஒருசரக்குலாரி ஒரு முறை வந்து செல்ல சுங்கச்சாவடிக்கு மட்டும் கூடுதலாக சுமார் ரூ.400 செலவிட வேண்டியது உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவார்கள். எனவே காலாவதியான சுங்கச்சாவடிகளை அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்