< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

உணவுப்பழக்க மாறுதல், உடற்பயிற்சி இல்லாமை நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?- டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
20 March 2023 3:43 AM IST

உணவுப்பழக்க மாறுதல், உடற்பயிற்சி இல்லாமை நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?- டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து

ஒருவருடைய உடல் 'இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.

மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கு அதிகமான மக்களை கொல்கிறது.

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது, அதிக பசி ஏற்படுவது, மிக வேகமாக எடை குறைவது, அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிகக்காலம் பிடித்தல், திரும்பத் திரும்ப தோல், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்படுவது, பாதங்களில் உணர்ச்சி குறைவது அல்லது எரிச்சல் ஏற்படுவது தான் நீரழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமலும் வருகிறது.

நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவை நடுத்தர வயது கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாகும். இதுதவிர அதிகமாக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு நம்மை அழைத்து செல்கிறது.

தற்போது இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. உலக அளவில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது 4 மடங்கு அதிகமாகி உள்ளது என்கிறது.

அதிகரிக்கும்

உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019-ம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும். சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட 4 பேரில் ஒருவர் 'டைப்-2' நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

உலக நீரிழிவு தினம்

இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்த அக்கறையோடு உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு இந்நாளை உருவாக்கின. 160 நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது, 2006-ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாளாக இருந்து வருகிறது.

மரபு ரீதியாக

ஈேராட்டை ேசர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் செந்தில்வேலு:-

நம்முடைய உடலில் சர்க்கரை அளவு சாப்பிடும் முன்பு அதிகபட்சமாக 110-ம், சாப்பிட்ட பின்னர் 140-க்கு குறைவாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம். இதன் அளவு மாறும்போது நமக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை செல்களுக்கு அனுப்பும் பணியை இன்சுலின் செய்கிறது. இதுகுறையும் போது ரத்தத்தில் சர்க்கரை தேங்கிவிடும். செல்களுக்கு செல்லாது. இதனால் சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் பல காரணங்களால் வருகிறது. முக்கிய காரணமாக உணவு பழக்க வழக்கம் உள்ளது. நாம் 65 முதல் 75 சதவீதம் வரை மாவுச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுகிறோம். இதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் இன்சுலின் நமக்கு வயதாகும்போது குறைவதால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் மரபு ரீதியாகவும், உடல் பருமன், மன அழுத்தம், அதிக உணவு சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளது.

உடற்பயிற்சி

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் நாம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுகளை குறைத்துக்கொண்டு, புரதச்சத்து, நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் நோய் பாதிப்பு இல்லை என்றாலும் தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. நம்முடைய உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். நீரிழிவு நோய் வராமல் இருக்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

உணவு கட்டுப்பாடு

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்:-

'நீரிழிவு நோய் உள்ளதால் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் போன்ற பழங்களையும், இனிப்புகளையும் சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி எடுத்துக்கொள்ளலாம், சர்க்கரை இல்லாமல் டீ குடிக்க வேண்டும் என்று பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நீரிழிவு நோயினை கட்டுக்குள் கொண்டு வர அதன் தன்மைக்கு ஏற்ப டாக்டர்கள் மருந்து, மாத்திரைகளை கொடுக்கிறார்கள். அதை முறையாக சாப்பிட்டு வருகிறேன். நடைபயிற்சி மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன்படி வாரத்திற்கு 4 அல்லது 5 நாட்கள் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்கிறேன். இதன் காரணமாக நீரிழிவு நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது' என்றார்.

சத்தான உணவுகள்

அந்தியூர் பகுதியைச் சேர்ந்த கே.தேவராஜ்:-

பொதுமக்கள் தங்களது வேலைப்பளுவின் காரணமாக அவசர அவசரமாக வேலைக்குச் செல்ல வேண்டி உள்ளது. அதனால் சரியான உடற்பயிற்சி மேற்கொள்வதில்லை. மேலும் உணவு பழக்க வழக்கங்கள் மாற்றத்தாலும், துரித உணவு சாப்பிடுவதாலும் நீரிழிவு நோய்கள் சிறுவர் முதல் பெரியவர்களை தாக்குகின்றன. அதனால் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகள் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயிலில் இருந்து விடுபட அனைவரும் சரியான நேரத்துக்கு சத்தான உணவுகளை சாப்பிட்டும் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பாதுகாக்க முடியும்

சென்னிமலையில் உள்ள டாக்டர் பி.பி.அருள்மோகன் கூறியதாவது:-

கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். தற்போது இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் துரித உணவையும், பதப்படுத்தப்பட்ட உணவையும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து மறுநாள் காலையில் அதிக நேரம் தூங்குகின்றனர். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி பல்வேறு நோய்களும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து போதுமான உடற்பயிற்சியை செய்தால் மட்டுமே சர்க்கரை நோய் மட்டுமின்றி எந்த நோயும் வராமல் பாதுகாக்க முடியும்.

தவறாமல் நடைபயிற்சி

சென்னிமலையை சேர்ந்த சி.எஸ்.மோகன்குமார் கூறியதாவது:-

நான் பல வருடங்களாக நடை பயிற்சி செய்து வருகிறேன். எனக்கு சர்க்கரை நோய் போன்ற எதுவும் இல்லாவிட்டாலும் தினமும் சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் பலமுறை சுற்றி வந்து நடை பயிற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடன் நடைபயிற்சிக்கு வந்த சிலருக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நடை பயிற்சிக்கு சரியாக வர மாட்டார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஈரோட்டில் இருந்து சென்னிமலை முருகன் கோவில் வரை நடைபயிற்சி மேற்கொண்டார். ஈரோட்டிலும் தவறாமல் நடை பயிற்சி செய்தார். இப்படி முக்கிய பிரமுகர்களே தவறாமல் நடை பயிற்சி செய்வதை முன் உதாரணமாக எடுத்து சாதாரண மக்களும் தவறாமல் நடைபயிற்சியை மேற்கொண்டால் நோய், நொடியின்றி வாழலாம்.


மேலும் செய்திகள்