< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

20-ந்தேதி தாக்கல் ஆகிறது: தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
18 March 2023 2:51 AM IST

20-ந்தேதி தாக்கல் ஆகிறது: தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது 'பட்ஜெட்'டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பொதுமக்கள் பலர் தாங்கள் விரும்பும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா? என்று ஆவலோடு காத்து இருக்கிறார்கள். அதுபற்றிய கருத்துகள் வருமாறு:-

ஓய்வூதிய உயர்வு

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்டசெயலாளர் வ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதி இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஓய்வூதியத்தில் இருந்து மாதம் தோறும் ரூ.497 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஓய்வூதியர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், காப்பீட்டு நிறுவனம் சுயநலத்துடன் நடந்து கொள்கிறது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரலாம்.

அகவிலைப்படி நிலுவைத்தொகையை மொத்தமாக வழங்கும் உத்தரவையும் எதிர்பார்க்கிறோம். மேலும், தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைவருக்கும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய சலுகை வழங்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் செயலாளர் சாரல் எஸ்.கணேசன் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட்டில் ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு அதிக அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறோம். குறிப்பாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காளைமாடு சிலை- கொல்லம்பாளையம், காளைமாடு சிலை-பழைய ரெயில் நிலையம்-வெண்டிபாளையம்-சோலார் மேம்பாலம் தொடர்பாக அறிவிப்பு வேண்டும் என்று விரும்புகிறோம். இதுபோல் சென்னிமலை ரோடு கே.கே.நகர்-ரங்கம்பாளையம் மேம்பாலம் அத்தியாவசியமாகும்.

புறநகர் சுற்றுவட்டச்சாலையாக சோழசிராமணியில் இருந்து எழுமாத்தூர், அவல்பூந்துறை, வெள்ளோடு, பெருந்துறை வழியாக செல்லும் சாலையை பெருந்துறை சிப்காட் வரை 2 வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.

உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படுவதுடன், கிராம விவசாயிகள் நகருக்கு வரும் திட்டத்தில் மாற்றம் செய்து, கிராம அளவிலேயே உழவர் சந்தைகள் கூட வழிவகைசெய்ய வேண்டும்.

தொழில் கூடங்களுக்கு மின்சார வினியோகத்தில் உள்ள விலக்குகள் நீக்கப்பட வேண்டும். சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மின்கட்டணம் குறைக்கப்பட்டால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியர்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளருமான ராஜமாணிக்கம் கூறியதாவது:-

ஆசிரிய-ஆசிரியைகள் பாடம் எடுக்கும் பணியை மட்டுமே செய்ய அனுமதிக்கும் வழிவகையை இந்த பட்ஜெட் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். கல்வி தகவல்கள் பதிவுக்கான எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பான வேலைகளுக்கு கணினி பயிற்சி பெற்ற பணியாளர்களை பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். இன்று ஆசிரியர்கள் எந்த நேரம் பார்த்தாலும் செல்போன்களை கையில் வைத்துக்கொண்டு வீட்டுப்பாடம் எழுதுவது போன்று எந்த நேரமும் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். இது மாணவ-மாணவிகளுக்கு பயன் அளிக்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. எனவே இதுபற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இடைநிற்றல் குறைக்கப்பட வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையும் ஒரே வகுப்பில் அதிக மாணவர்கள் இருந்தால் 20 மாணவ-மாணவிக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இதுபற்றி அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

கிராமப்புற சாலைகள்

சென்னிமலை அருகே ஒட்டவலசை சேர்ந்த குடும்பத்தலைவி ரேவதி பாலு:-

கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நகர பகுதியில் பெரும்பாலான தொழில்கள் பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து வருவதால் வேலையின்மை ஏற்பட்டு வருகிறது. அதனால் விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதேபோல் தென்னை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் விலை பொருட்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் குறைந்தபட்ச விலை கிடைக்க பட்ஜெட்டில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கிராமப்புற சாலைகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலைகளை பராமரிக்க கூடுதல் நிதி பட்ஜெட்டில் ஒதுக்குவார்கள் என்று நினைக்கிறேன்.

வரிகளை நீக்கவேண்டும்

பெருந்துறை ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.வித்யாசாகரி:-

தற்போது வாகன எரிபொருள் மட்டுமின்றி சமையல் எரிவாயு விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வால் சாதாரண பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை உள்ளது. பல வீடுகளில் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அதேபோல் சிறு தொழில்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு பட்ஜெட்டில் சாதாரண பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு உண்டான வரிகளை நீக்கி, சிறு தொழில்களுக்கு உண்டான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்