ஈரோடு
சென்னை ஐகோர்ட்டு யோசனை: பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை- சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து
|சென்னை ஐகோர்ட்டு யோசனை: பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை- சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து
ஆவின் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் முதலில் பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.
தற்போது ஆவின் நிறுவனம் கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்தப்பட்ட பாலை பச்சை நிற பாக்கெட்டிலும், சமன்படுத்தப்பட்ட பாலை நீல நிற பாக்கெட்டிலும், இரு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலை மெஜந்தா நிற பாக்கெட்டிலும் தரம் பிரித்து, விற்பனை செய்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலமாக 29 லட்சம் லிட்டர் பாலை, ¼ லிட்டர், ½ லிட்டர், 1 லிட்டர் என 63 லட்சம் பாக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
ஐகோர்ட்டு யோசனை
பால் பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் திருப்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டமும் ஆவின் அறிவித்திருந்தது. தற்போது அந்த நடைமுறை மருவிப்போய்விட்டது.
இதனால் அன்றாடம் பயன்படுத்தும் 63 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்திய பிறகு, குப்பை மேட்டுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறாக சேரும் பிளாஸ்டிக் கவர்கள் பெரிய சீரழிவை பிற்காலத்தில் தரக்கூடியது.
ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ஒரு யோசனையை தெரிவித்திருந்தது.
கண்ணாடி பாட்டிலில்...
ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும்படி, அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு பகுதியைத் தேர்வு செய்து அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையிடமும், ஆவின் நிறுவனத்திடமும் கருத்துகளை கேட்பதாக, அரசு தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விசாரணை மீண்டும் வருகிற 8-ந்தேதி வர இருக்கிறது.
சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கும் இந்த யோசனை சாத்தியப்படுமா? என்ற கேள்விக்கு மக்கள், பால் முகவர்கள், டீக்கடைக்காரர் ஆகியோர் பதில் அளித்தனர். அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
குப்பை அதிகமாகும்
ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்த, மாநகராட்சி பள்ளிக்கூட ஆசிரியை கே.லதா:-
பாக்கெட் பால் கையாளுவதற்கு எளிதாக இருக்கிறது. பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும்போது கையாளுவது சிரமமாகவே இருக்கும். கடைகளில் பால் பாக்கெட்டுகள் வாங்கி கைப்பையில் வைப்பது, வண்டியில் எடுத்துச்செல்வது எளிதாக இருக்கும். பாட்டில் என்றால் சற்று சிரமம்தான். ஏன் என்றால் பால் என்பது அன்றாடம் தேவைப்படும் ஒரு பொருள். நினைத்த மாத்திரத்தில் பால் வாங்க வேண்டியது இருக்கும். அப்போதெல்லாம் ஒரு பாட்டில் வீட்டில் சேர்ந்தால், பால் மூலம் வரும் குப்பையே அதிகமாகி விடும். ஒரு வேளை கண்ணாடி பாட்டிலாக இருந்தால் அது உடைந்து விடும் ஆபத்தும் உண்டு. பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் அடைக்கும்போது, தற்போது எங்கு பார்த்தாலும் குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் குப்பை மலையாக சேருவதுப்போன்று பால் பாட்டில்களும் சேரும் நிலைதான் வரும். இந்த மாதிரியான பிரச்சினைகள் வராமல் இருக்க பால் பாக்கெட்டினை மறுசுழற்சி செய்யும் வகையில் உருவாக்கலாம். பால் பாக்கெட்டுக்கு அதிகபட்சமாக ஒரு நாள்தான் வாழ்நாள். எனவே அதற்கு ஏற்ப மறுசுழற்சி செய்யும் வகையில் அல்லது மக்கும் நிலையிலான பாக்கெட்டுகளை உருவாக்க வேண்டும். அதுவே சிறப்பானதாக இருக்கும். பாட்டிலில் பால் விற்பனை கொண்டு வந்தால் கண்டிப்பாக பால் விலை உயரும். இது ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
வரவேற்பு
நாராயணவலசு பகுதியை சேர்ந்த கே.ஆனந்தமூர்த்தி:-
பால் பாக்கெட்டுக்கு பதில், பாட்டிலில் விற்பனை செய்வது என்பது சிறப்பானதாக இருக்கும். ஏன் என்றால் பாக்கெட்டில் வாங்கி வரும் பாலை வீட்டில் வந்ததும் தேவைக்கு போக மீதியை எடுத்து வைக்க ஒரு பாத்திரம் தேவைப்படும். ஆனால், பாட்டிலில்அப்படியே வாங்கி வந்தால், தேவைக்கு போக மீதியை அதே பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். ஒரு தனியார் பால் நிறுவனம் பாட்டிலில் பால் விற்பனை செய்து வருகிறது. பாட்டில் தரமாகவும் இருக்கிறது. எனவே இன்னொரு தேவைக்காகவும் பயன்படுத்த முடியும். எனவே அதுபோன்று நல்ல தரத்துடன் பாட்டில் இருந்தால் சற்று விலை உயர்ந்தாலும் மக்கள் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
பாக்கெட் பால் வாங்கி விட்டால், பாக்கெட்டுகள் குப்பையாக செல்கின்றன. அது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பாட்டிலில் பால் விற்பனை என்பது வரவேற்கத்தக்கது.
மறுசுழற்சி
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே ஆவின் பால் விற்பனையகம் நடத்தி வரும் ஆர்.பாலாஜி:-
நாங்கள் எங்கள் கடையில் தினசரி 40 லிட்டருக்கும் மேல் பால் விற்பனை செய்கிறோம். பாக்கெட் பாலாக இருப்பதால் பாலை ஊற்றி விட்டு பாக்கெட்டுகளை ஒரு பையில் போட்டு வைத்து, ஆவின் நிறுவனத்திற்கு திரும்ப கொடுத்து விடுகிறோம். அவர்கள் அதற்கு உரிய பணத்தை தருவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் மறுசுழற்சி செய்து விடுகிறார்கள். இதுவே பாட்டிலில் பால் விற்பனை செய்தால், எத்தனை பாட்டில்களை இங்கே அடுக்கி வைத்து பாதுகாக்க முடியும். இதுபோல் எங்களிடம் டீக்கடைகளுக்கு அதிக அளவில் பால் வாங்கி செல்கிறார்கள். பாட்டில் என்றால் அவர்கள் எடுத்துச்செல்வது, பாய்லர் அருகே வைத்துக்கொள்வது உள்ளிட்டவற்றில் சிக்கல் இருக்கும். பாக்கெட் நன்றாக உள்ளது. அதை மறுசுழற்சி செய்வதை தீவிரப்படுத்தினால் போதுமானது என்பது எனது கருத்தாகும்.
டீக்கடைக்காரர்
ஈரோடு நாச்சியப்பா வீதியில் டீக்கடை நடத்தி வரும் ஏ.அண்ணாதுரை:-
பாட்டிலாக இருந்தாலும் சரி, பாக்கெட்டாக இருந்தாலும் சரி, பால் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை பாதுகாத்து வைப்பது சற்று சிரமம்தான். கண்ணாடி பாட்டிலில் பால் கொடுத்தால், எங்களைப்போன்ற டீக்கடைக்காரர்களுக்கு சிரமம்தான். பிளாஸ்டிக் பாட்டிலில் வழங்குவது என்றால் அது தரமுள்ள பிளாஸ்டிக்காக இருக்க வேண்டும். சாதாரண பிளாஸ்டிக்கில் வைத்த பாலை பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இந்த விஷயத்தில் மிக கவனமாக எந்த நடைமுறையாக இருந்தாலும் எடுக்க வேண்டும். பால் தினசரி தேவைக்கு உரியது. எனவே பால் பாக்கெட், பாட்டில் எதுவாக இருந்தாலும் அவற்றை முழுமையாக மீண்டும் சேகரிக்க முடியாது. பாதி குப்பைக்கிடங்குக்குதான் செல்லும். எனவே அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் குப்பையில் இருந்து பிரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.