< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்

பொங்கல் வாழ்த்து அட்டைகள்- மங்காத நினைவுகள்

தினத்தந்தி
|
14 Jan 2023 3:46 AM IST

பொங்கல் வாழ்த்து அட்டைகள்- மங்காத நினைவுகள்

வாழ்த்துகள்... ஒவ்வொரு மனிதரும் அவ்வப்போது விரும்பும் ஒரு வார்த்தை. மகிழ்ச்சியின் போது, சாதனையின் போது, புதிதாக ஒரு வேலையை தொடங்கும்போது, வெற்றியின் போது இப்படி ஒரு வார்த்தை கேட்டால் இன்னும் உத்வேகம் அதிகமாகும்.

பொங்கல் பானை, மாட்டுப்பொங்கல் படம் ஆகியவற்றுடன் நடிகர், நடிகைகளின் படங்களும் வாழ்த்து அட்டைகளை அலங்கரிக்கும்.

ஆனால், தொழில் நுட்ப வளர்ச்சியால் செல்போன்களில் எஸ்.எம்.எஸ். என்ற முறையில் மின்னணு வாழ்த்துகள் தொடங்கி, இன்று வாட்ஸ்அப், டெலகிராம், முகநூல் என்று வாழ்த்துகள் அனுப்பும் ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் வாழ்த்து அட்டைகள் மீதான மோகம் குறைந்து விட்டது. வாழ்த்து அட்டைகளை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஒரு கலாசாரம் இருந்தது என்பது தற்போதையை தலைமுறைக்கு தெரியவே இல்லை.

சி.ஐ.சந்தோஷ்

இதுபற்றி ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கணினி என்ஜினீயர் சி.ஐ.சந்தோஷ் கூறியதாவது:-

பொங்கல் வாழ்த்து மட்டுமல்ல, எந்த ஒரு வாழ்த்தாக இருந்தாலும் கையில் இருக்கும் செல்போன்களிலேயே அனுப்பி விடுவதுதானே வழக்கம். அது என்ன வாழ்த்து அட்டை... அப்படி எல்லாமா இருந்தது. நான் இதுவரை வாழ்த்து அட்டை யாருக்கும் அனுப்பியதும் இல்லை. எனக்கும் யாரும் அனுப்பியதில்லை. எனக்கு 24 வயதாகிறது. உண்மையாக இந்த தகவலே எனக்கு புதிதாக இருக்கிறது.

இப்போது என்னிடம் வைக்கப்பட்டு இருக்கும் இந்த கேள்வி, வாழ்த்து அட்டைகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றி தெரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.தனசேகர்

ஈரோடு கருங்கல்பாளையம் தபால் நிலையத்தில் மூத்த தபால்காரராக பணியாற்றி வரும் கே.தனசேகர் கூறியதாவது:-

நான் பணிக்கு சேர்ந்த புதிதில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வந்து விட்டால் வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்வதற்கு மட்டுமே தனியாக ஒரு பை வேண்டும். வீதிகளுக்குள் எங்கள் சைக்கிள் சத்தம் கேட்டாலே, கடிதம் வந்து இருக்கிறதா என்று தானாக முன்வந்து கேட்பார்கள். கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் தங்களிடம் சரியாக வந்து சேர வேண்டும் என்பதற்காக, எங்களை பார்த்தவுடன் உறவினர்கள் போன்று சிரிப்பார்கள். நாளடைவில் பொதுமக்களுக்கும் எங்களுக்கும் உண்மையிலேயே ஒரு உறவு ஏற்பட்டு விடும். ஆனால் சமீபகாலமாக உறவினர்களிடம் இருந்து கடிதங்கள் வருவது கூட இல்லை. இப்போது கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் வருகின்றன. கடிதங்கள் பெரும்பாலும் நிதி நிறுவனங்கள் சார்ந்ததாக இருக்கும். வாழ்த்து அட்டைகளும் வியாபாரம் தொடர்பானது. அரசியல் கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் அனுப்புவது என்றே இருக்கும். இதனால் யாரும் கடிதங்கள் தொடர்பாக ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில் எங்களுக்கும் பொதுமக்களுக்குமான உறவு முன்புபோல் இருப்பதில்லைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.மணிவேல்

ஈரோடு தபால் அலுவலகத்தில் பணியாற்றும் எம்.மணிவேல் கூறியதாவது:-

நான் பணியில் சேர்ந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த 6 ஆண்டுகளில் உறவினர்கள் வாழ்த்து அட்டைகள் அனுப்பி நான் பார்க்கவில்லை. நிதி நிறுவனங்கள் சார்ந்த வாழ்த்து அட்டைகள் வரும். எல்.ஐ.சி. வாகன இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்ட கடிதங்கள் அல்லது இதழ்கள்தான் தபாலில் வருகின்றன. அரசு சார்ந்த ஆதார், பாஸ்போர்ட் ஆகியவை வரும். இதனால் தொடர்ந்து பொதுமக்களிடம் நெருக்கமான உறவு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.ஈஸ்வரி

தபால் பெண்மணி ஏ.ஈஸ்வரி கூறியதாவது:-

நான் 9 மாதங்களாக இந்த பணியில் உள்ளேன். எனது ஏரியாவில் அனைத்து வீதிகளின் பெயரும் எனக்கு தெரியும். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சில கிறிஸ்தவ ஜெப அமைப்புகள் மூலம் ஏராளமாக வாழ்த்து அட்டைகள் வந்தன. அதை பெற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டனர். ஒரு நாள் தாமதமாக வந்தால் கூட, இந்த முறை ரொம்ப தாமதம் என்று கூறினார்கள். அப்போதுதான், வாழ்த்து அட்டைகளை பொதுமக்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் தனிப்பட்ட நபர்களிடம் இருந்து நட்பு, உறவு ரீதியாக எந்த வாழ்த்து அட்டைகளும் வரவில்லை. ஒரு வேளை அப்படி வந்தால் அதை பெறுபவர்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.பாலசுப்பிரமணியன்

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் பேன்சி கடை நடத்தி வரும் கே.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

நான் கடை தொடங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. அப்போதெல்லாம் தீபாவளி முதல் பொங்கல் வரை வாழ்த்து அட்டைகளுக்கு என்று தனியாக ஒரு பிரிவு தொடங்கி நடத்துவோம். எல்லாவிதமான வாழ்த்து அட்டைகளும் கணக்கின்றி விற்பனையாகும். அப்போது அதிகபட்சமாக ஒரு வாழ்த்து அட்டை ரூ.7 இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்தாலும், சிறந்த வடிவமைப்புகளுடன் அட்டைகள் விற்பனைக்கு வரும். அட்டை வாங்குபவர்கள் கொடுக்கும் விலையை வைத்தே, அவர்கள் அனுப்பவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை, அன்பு ஆகியவை தெரிந்து விடும். கடந்த 10 ஆண்டுகளாக தனியாக கடை அமைக்க தேவை இல்லாத நிலை ஏற்பட்டது. ஒரு பண்டிகை காலத்தில் குறைந்த பட்சம் 100 வாழ்த்து அட்டைகளாவது விற்பனையாகி வந்தன. கடந்த 5 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகைகளுக்கு ஒரு வாழ்த்து அட்டை கூட விற்பது இல்லை. கடந்த கிறிஸ்தும் பண்டிகைக்கு வெறும் 10 அட்டைகள் விற்பனையானது. இப்போது பொங்கல் பண்டிகைக்கு ஒரு அட்டை கூட இல்லை. ஒருவரும் கேட்டுவரவும் இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி அட்டைகள் இன்னும் இருக்கிறது. வாழ்த்து அட்டை முன்பதிவு செய்வதற்கு கூட அச்சிடும் நிறுவனங்கள் முன்வருவதில்லை. காதலர் தின அட்டைகள், பிறந்தநாள் அட்டைகள் மட்டுமே யாராவது கேட்டு வருகிறார்கள். அதுவும் எப்போது நிறுத்தப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. பலர் அட்டைகள் கேட்டு வருகிறார்கள். ஆனால் விலை உயர்வும் அவர்களை வாங்கவிடாமல் செய்து விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக, அனைவரும் கூறும் ஒரு கருத்தாக, பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மத்தியில் வாழ்த்து அட்டைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது விரைவில் வாழ்த்து அட்டை கலாசாரம் மீளும்.


மேலும் செய்திகள்