< Back
மாநில செய்திகள்
ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து கரூர் வாலிபர் பலி
திருச்சி
மாநில செய்திகள்

ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து கரூர் வாலிபர் பலி

தினத்தந்தி
|
3 Oct 2022 3:42 AM IST

ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து கரூர் வாலிபர் உயிரிழந்தார்.

மலைக்கோட்டை:

ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்தது

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டார். வெடிச்சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். மேலும் வெடித்த கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது. அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தீப்பொறி

மேலும் வெடித்த சிலிண்டரின் பாகங்கள் சிதறியதில் ஒரு ஜவுளி கடையின் 'லிப்ட்' கண்ணாடிகள், கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி, ேகாட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த விபத்தில் இறந்தவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி(வயது 35) என்பது ெதரியவந்தது. மேலும் அப்பகுதியில் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தவர் வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் இருந்த இடத்தில், ரவி சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

26 பேர் காயம்

மேலும், இந்த விபத்தில், பொன்மலை காருண்யாநகரை சேர்ந்த சில்வியா(23), அதே பகுதியைச் சேர்ந்த பிரியா(22), மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கவியரசு(26) உள்பட 26 பேர் காயமடைந்தனர். இதில், 16 பேர் 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். சம்பவ இடத்திற்கு கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ேநரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்