கரூர்
கரூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது: ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
|கரூர் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கூடாது என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பூச்சொரிதல் விழா
கரூரில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா நேற்று முன்தினம் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் மதன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில்...
இதில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில், அனுமதிக்கப்பட்ட நேரங்களில் சென்று ேபாலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊர்வலத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்வதால் எந்த மதம் அல்லது இனத்தை முன்னிலை படுத்தும் வகையில் கோஷமோ, பதாகைகளோ அல்லது கொடிகளோ அல்லது டீசர்ட் அணிந்து கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
பூத்தட்டுகளை கோவிலுக்குள் அனுமதிப்பதை பொறுத்து முதலில் வருவதற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும். ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குடிபோதையில் இல்லாத நிலையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்க...
ஊர்வலப்பாதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் போலீசாரின் கட்டுபாட்டுக்கு இணங்கி செயல்பட வேண்டும். பல்வேறு பகுதி மக்களும் ஒரே நேரத்தில் ஒன்று கூடி ஊர்வலமாக வரும் நிகழ்வு என்பதால் யாரும் யாரையும் முன்னிலைப்படுத்தும் வகையில் செயல் படக்கூடாது.
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்தாமல், பெட்டி வடிவிலான ஒலிப்பெருக்கியே பயன்படுத்த வேண்டும். அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்க வேண்டும். ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அல்லது பொதுமக்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அந்த பகுதியை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.