கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கரூர் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும். முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 19-ந்தேதி கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். அதை வீடியோ பதிவு செய்யவும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது.
தேர்தல் நடந்தது குறித்து வருகிற 22-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் பாதுகாப்பு கோரி போலீசாரை அணுகலாம், என உத்தரவிட்டது.
இந்தநிலையில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் பிற்பகலில் வழக்குகளை விசாரித்தனர். அப்போது துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும், மனுதாரரமான திருவிகா சார்பில் ஆஜரான வக்கீல், தேர்தல் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மனுதாரரை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றுவிட்டனர்.
எனவே துணை தலைவர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இதுகுறித்து விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், திமுகவிற்கு 7, அதிமுகவிற்கு 4 வாக்குகள் பதிவாகி உள்ளது. எனவே கடத்தப்பட்டவர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. இதானல் தேர்தல் முடிவை வெளியிட தடைவிதிக்க கூடானது என்று வாதிட்டதார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவித்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர். மேலும், அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கை திண்டுக்கல் ஏ.எஸ்.பி. விசாரிக்கவும் உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.