< Back
மாநில செய்திகள்
திருச்சியில் கருணாநிதி சிலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாநில செய்திகள்

திருச்சியில் கருணாநிதி சிலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
25 Jan 2024 12:16 PM IST

திருச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சி,

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், துணை மேயர் திவ்யா, கவிஞர் சல்மா, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் 100 நாட்களுக்கு 100 நிகழ்ச்சிகளென நாள்தோறும் மக்கள் பயனடையும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

75 நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், 76-வது நிகழ்ச்சியாக திருச்சி டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளான இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தோம்.

தி.மு.கழகம், தேர்தல் அரசியலில் ஈடுபட பெரும்பான்மையான கழக உடன்பிறப்புகள் ஆதரவளித்த தீரர் கோட்டமாம் திருச்சியில், கலைஞர் அவர்களுக்கு திருவுருவச்சிலையை திறந்து வைத்ததோடு, 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என மாபெரும் வெற்றியை பெற்றிட அயராத உழைக்க உறுதியேற்றோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்