< Back
மாநில செய்திகள்
அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டியவர் கருணாநிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டியவர் கருணாநிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
24 Aug 2024 8:31 PM IST

லட்சோபலட்சம் பேருக்கு தாயாகவும், தந்தையாகவும் விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை காட்சி வடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

"தந்தையாக மட்டுமல்ல, எனக்கு ஒரு தாயாகவும் விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாகவும், தந்தையாகவும் விளங்கிய அவர், அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டினார்.

கலைஞர் எழுதினால் தமிழ் கொட்டும் என்பது போல், கலைஞர் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும். உயிரினும் மேலாக உடன் பிறப்புகளை மதித்தவர் கருனாநிதி. அனைத்து துறைகளை சேர்ந்தவர்களையும் அவர் அரவணைத்துச் சென்றார்.

கலைஞர் கருணாநிதியின் கண் அசைவுக்கு ஏற்ப செயலாற்றியவர் எ.வ.வேலு. என்னிடமும் அதே போல் இருக்கிறார். எதிலும் வல்லவரான எ.வ.வேலு, எழுத்திலும் வல்லவர் என இன்று நிரூபித்திருக்கிறார். எ.வ.வேலுவை போன்று அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டால் நல்லது என கலைஞர் கருணாநிதி பாராட்டியிருக்கிறார்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்