விழுப்புரம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளின்போது 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு கலெக்டர் மோகன் தகவல்
|முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிபிறந்த நாளின்போது 5 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா வருகிற 3-ந் தேதி அரசு விழாவாக நடைபெற உள்ளது. இதையொட்டி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் பிறந்த நாள் விழாவிற்கான அரங்கம் அமைத்து உயர்கல்வித்துறை அமைச்சர்,
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்திடும் வகையிலும் அனைத்துத்துறைகளின் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காட்சி
மேலும் பல்வேறு துறைகள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைத்து பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் அமைக்கப்படுவதுடன், இந்த கண்காட்சியானது தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக செயல்பட உள்ளது.
அதேபோல் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் கலை பண்பாட்டுத்துறைமூலம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இவ்விழாவில் மாவட்ட அளவில் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் அதிகளவில் கலந்துகொண்டு பார்வையிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.