கரூர்
அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்
|அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் மலைக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
குளித்தலை அருகே அய்யர்மலையில் பாடல் பெற்ற சிவத்தலமான ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. 1,017 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீப திருநாள் அன்று மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபடுவது வழக்கம். அதுபோல் கார்த்திகை தீபத்திருநாளான நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் இக்கோவிலின் மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதுபோல் இக்கோவிலின் அடிவாரம் முதல் மலை உச்சிவரை உள்ள 1,017 படிகள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும், முக்கிய இடங்களிலும் பக்தர்கள், பொதுமக்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டார்கள்.
ரெத்தினகிரீசுவரர் கோவில் மலை உச்சியில் நேற்று ஏற்பட்ட மகாதீபம் நாளை வரை 3 நாட்கள் அணையாமல் எரியும் வகையில் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளையொட்டி குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜைகள் செய்து வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், வீட்டின் வாசலிலும் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். கார்த்திகையையொட்டி குளித்தலையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். கார்த்திகை திருவிழாவையொட்டி பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.