விழுப்புரம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பெருமுக்கல் முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பெருமுக்கல் முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே பெருமுக்கலில் உள்ளது முக்தியாஜல ஈஸ்வரன் கோவில். இந்த கோவில் சஞ்சீவி மலை மீது அமைந்துள்ள மிகவும் பழமையான கோவிலான இங்கு, கார்த்திகை தீப திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், தீபத்திருநாள் நேற்று,முன்தினம் தொடங்கியது. இதையொட்டி ஈஸ்வரன் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து வந்தன. தீபம் ஏற்றும் விழாவான நேற்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் ஈஸ்வரன், மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், அம்மாள், நந்தீஸ்வரர், அனுமன் உள்ளிட்ட சாமிகளுக்கு பால், தயிர், மோர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பழவகைகள் என 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
1500 அடி உயர மலை
இதனை தொடர்ந்து வெள்ளிக்கவசத்திலும், மலராலும் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்வரன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது நடந்த மகாதீபாராதனையை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக திண்டிவனம் பெருமாள் கோவிலில் இருந்து 5½ ஆடி நீளமுள்ள பெரிய கொப்பரை லாரியில் ஏற்றப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் பக்தர்கள் தங்களால் முடிந்த நெய்யை காணிக்கையாக வழங்கினர். பின்னர் பெருமுக்கல் மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சியம்மன் உடனுறை ஈஸ்வரனுக்கு நெய்யால் அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து பெரிய கொப்பரை 1500 அடி உயரமுள்ள மலைக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது.
தீபம் ஏற்றப்பட்டது
பின்னர் மாலை 5.55 மணியளவில் ஈஸ்வரனிடம் இருந்து பெறப்பட்ட தீ பந்தத்தை கோவிலில் இருந்து நெய்தீப கொப்பரை அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் தீ பந்தத்துடன் நெய் தீப கொப்பரையை 3 முறை சுற்றி வந்தபோது, தீபத்தை காணவந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷங்களை எழுப்பினர். வண்ணமயமான வான வேடிக்கைகளுடன் மாலை 6 மணிக்கு நெய் கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமுக்கல் அன்னபூரணி புளுமெட்டல்ஸ் உரிமையாளரும், மரக்காணம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ரவிச்சந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தீவனூர் பெருமாள் கோவில்
திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலான இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று அதிகாலையிலேயே
கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து மலரால் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாலை 6 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.