திண்டுக்கல்
கார்த்திகை தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது
|பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது
கார்த்திகை தீபத்திருவிழா
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மலைக்கோவிலில் விநாயகர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், துவார பாலகர்கள் மற்றும் மயில்வாகனம், கொடிமரத்துக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.
7 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகருக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 7.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.
6-ம் திருநாளான 5-ந்தேதி சாயரட்சை பூஜையின்போது யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது. அதேபோல் திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகார திருமண மண்டபத்தில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சொக்கப்பனை ஏற்றுதல்
7-ம் திருநாளான திருக்கார்த்திகை அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு உடன் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பின்னர் மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதலும், மாலை 6 மணிக்கு மலைக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
----------------
தங்கரத புறப்பாடு நிறுத்தம்
திருக்கார்த்திகை தீபத்திருவிழாயொட்டி வருகிற 6-ந்தேதி மட்டும் மலைக்கோவிலில் இரவு 7 மணிக்கு, தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.