< Back
மாநில செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

தினத்தந்தி
|
6 Dec 2022 4:40 AM IST

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை,

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது.

அதன்படி இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.



மேலும் செய்திகள்