< Back
மாநில செய்திகள்
கார்த்திகை 3-வது சோமவார சங்காபிஷேகம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கார்த்திகை 3-வது சோமவார சங்காபிஷேகம்

தினத்தந்தி
|
6 Dec 2022 12:15 AM IST

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை 3-வது சோமவார சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை 3-வது சோமவார சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யேஸ்வரர் கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோவில், வேதங்கள் பூஜை செய்த கோவிலாகும். மூடிக்கிடந்த இக்கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக தலவரலாறு கூறுகிறது.

அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்த தலமாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரத்தில் (திங்கட்கிழமை) சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் கார்த்திகை சோம வார வழிபாடுகள் நடந்து வருகின்றன.

சங்காபிஷேகம்

அதன்படி 3-வது சோமவாரத்தையொட்டி நேற்று கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அப்போது கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து 1,008 சங்குகளுடன் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையொட்டி சன்னதியில் உள்ள சரவிளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு வேதாரண்யம் விளக்கழகு என்பதற்கு ஏற்ப சாமி சன்னதி ஒளிமயமாக காட்சி அளித்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று பிரதோஷம் என்பதால் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோச நாயனார் புறப்பாடு நடந்தது.

மேலும் செய்திகள்