கார்த்திகை தீபத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு லட்சதீபம் ஏற்றப்படுகிறது...!
|பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மாசி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருவிழா நடைபெறும் 10 நாட்கள் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
விழாவில் முக்கிய நாளான (இன்று) கார்த்திகை தீப தினத்தன்று மாலையில், கோவில் வளாகம், பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றுவார்கள். பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மேலும் இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்வார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.