< Back
மாநில செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நேரடி நெய் விற்பனை கவுண்டர் தொடக்கம்
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நேரடி நெய் விற்பனை கவுண்டர் தொடக்கம்

தினத்தந்தி
|
1 Dec 2022 4:54 AM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேரடி நெய் விற்பனை கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மகா தீபத்திற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய், ஆவினில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

மகா தீபத்திற்கு தேவையான நெய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் நேரடியாக நெய் விற்பனை தொடங்கப்படும். இதற்காக கோவிலின் ராஜகோபுரத்தின் அருகில் நேரடி நெய் விற்பனைக்கான கவுண்டர் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பக்தர்கள் மகா தீபம் நெய் காணிக்கைக்கான ரசீது பெற்று நேரடியாக நெய் விற்பனை கவுண்டரில் வழங்கி செலுத்தினர். கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்