< Back
மாநில செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மகா தீபம் ஏற்றம்    திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மகா தீபம் ஏற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
7 Dec 2022 12:15 AM IST

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வங்களை வழிபட்டனர். இதேபோல் கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மேல்மலையனூர்

விழுப்புரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று காலை முதல் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. அந்த வகையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து, கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் மயிலம் முருகன் கோவிலிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

விழுப்புரம்

இதேபோல், விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு மலரால் அலங்காரம் செய்யப்பட்டு ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பிறகு மாலை 6 மணியளவில் கோவில் மூலவர் சன்னதிக்கான கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மன், விநாயகர், முருகன் சன்னதிக்கான கோபுரங்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி கைலாசநாதர் வலம் வந்தார். பின்னர் கோவிலின் முன்புற கோபுரம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து, சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் மாலை 6 மணியளவில் விநாயகர், முருகன், அம்பாள், மூலவர் ஆகிய சன்னதிகளிலும், கோவில் கோபுரத்திலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றிய பின்னர் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூர் அபிராம ஈஸ்வரர் கோவிலிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சித்தேரிக்கரை வேடப்பர் கோவில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாமி தரிசனம்

இதுதவிர விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர், விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன், பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், ரெயிலடி விநாயகர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தீபத்திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அகல்விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் கோவில்களின் முன்பு சொக்கப்பனையை பக்தர்கள் கொளுத்தி மகிழ்ந்தனர். வீடுகளில் பெண்கள் அகல்விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். அதேபோல் தொழில் நிறுவனங்களிலும் விளக்கேற்றி வழிபட்டார்கள். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், கார்த்திகை சுருள் சுற்றியும் மகிழ்ந்தனர்.

செஞ்சி

செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலையில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் சிறப்பு பூஜைகள் செய்து நெய் நிரப்பிய கொப்பரை கோவிலின் கோபுர பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி சிவபெருமானை வழிப்பட்டனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதேபோல் செஞ்சியில் உள்ள ராணி கோட்டை உச்சியிலும் 30-வது வருடமாக கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் செய்திகள்