< Back
மாநில செய்திகள்
சத்தியமங்கலம் மருத்துவமனையில் இறந்த கர்நாடக விவசாயி: இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர்கள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தம்
ஈரோடு
மாநில செய்திகள்

சத்தியமங்கலம் மருத்துவமனையில் இறந்த கர்நாடக விவசாயி: இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர்கள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தம்

தினத்தந்தி
|
30 Sept 2023 2:39 PM IST

சத்தியமங்கலம் மருத்துவமனையில் இறந்த கர்நாடக விவசாயியின் இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர்கள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

தாளவாடி

சத்தியமங்கலம் மருத்துவமனையில் உயிரிழந்த கர்நாடக மாநில விவசாயியின் இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர்களை மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 5 மணிநேரத்துக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விவசாயி சாவு

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சிக்கொலா அருகே கங்காவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 68). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

பழனிசாமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் சொந்த ஊரான கங்காவாடி கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருடன் மருத்துவமனையில் இருந்த உறவினர்கள் சிலர் சொந்த ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.

அனுமதி மறுப்பு

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பழனிசாமியின் உறவினர்கள் 5 கார்களை வாடகைக்கு எடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ஆனால் மாநில எல்லைகளில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் அவர்கள் சென்ற கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினா்.

குழந்தைகளுடன் இருந்த அவர்கள் காட்டுப்பகுதியில் காத்திருந்தனர். காலை 7 மணிஅளவில் இருந்து சுமார் 5 மணிநேரமாக உணவு, குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக போலீசாரிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தமிழக பதிவு எண் வாகனங்களை கர்நாடக மாநிலத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால், மாலை வரை அனுமதிக்க முடியாது என போலீசார் மறுத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அவர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 5 கார்களில் புளிஞ்சூர் சோதனைசாவடி வரை அழைத்து சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கர்நாடக மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாநில போலீசார் பழனிசாமியின் உறவினர்களை கங்கவாடிக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்