கர்நாடக சட்டமன்றத்தேர்தல்; 3 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
|கர்நாடக சட்டமன்றத்தேர்தல் 3 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை,
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ந்தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் தமிழ்நாட்டை போன்று கர்நாடகாவிலும் பா.ஜ.க.வுடன் இணைந்து இந்தத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. திட்டமிட்டிருந்தது.
இதற்கான முயற்சிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருந்தார். அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தனியாக முயற்சிகள் நடந்தன. ஆனால் அம்மாநில பா.ஜ.க. 2 தரப்பினரையும் கூட்டணியில் சேர்க்காமல் கழற்றிவிட்டது.
அதைத்தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், 'கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் வேட்பாளராக போட்டியிடுவார்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் கர்நாடக மாநில அவைத்தலைவர் அனந்தராஜ், புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில மாணவரணி செயலாளர் நெடுஞ்செழியன், காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநிலச்செயலாளர் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.