காரைக்குடியை மாநகராட்சியாக தர உயர்த்த வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்
|காரைக்குடி நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
காரைக்குடி,
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நகராட்சி பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் நேருவை சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார்.
அதில், சிவகங்கை 1964-ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகங்கை நகராட்சி மாவட்ட தலைநகராக 1985-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சிவகங்கை நகராட்சியில் எந்தவித தர உயர்வும் செய்யப்படவில்லை. இதனால் நகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
மேலும் சிறப்பு நிலை நகராட்சி இல்லாததால் எட்டாவது ஊதிய குழு மாற்றத்தில் கிரேட் 2 சிறப்பு சிவகங்கை நகராட்சிக்கு நிறுத்தப்பட்டது.
மாநிலத்தில் பல நகராட்சி முதல் நிலை நகராட்சியாக இருந்து தேர்வு நிலை பெறாமலேயே நேரடியாக சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது .அதேபோன்று எனது தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை நகராட்சியும் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி சிறப்பாக செயல்பட தாங்கள் உதவிட வேண்டும் .
காரைக்குடி நகராட்சி தற்போதுவரை பெருநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியில் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழகம் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் ,ஆவின் பால்பண்ணை, ஏராளமான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் இப்பகுதி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களின் மையப் பகுதியாக உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை காரைக்குடி நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே. எனவே காரைக்குடி நகராட்சியினை மாநகராட்சி தரம் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தள்ளார்.