கப்பலூர் சுங்கச்சாவடி: போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் கைது
|கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பது தொடர்பாகவும், சுங்கச்சாவடியை கப்பலூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை அனுமதிப்பதில் 2020-ம் ஆண்டில் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.