< Back
மாநில செய்திகள்
காணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
மாநில செய்திகள்

காணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

தினத்தந்தி
|
16 Jan 2023 11:17 AM IST

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.



சென்னை,

பொங்கல் விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட வண்டலூர் உயிரியல் பூங்கா முக்கியமான இடங்களில் ஒன்றாகும். கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது.

தற்போது நிலைமை சீரான நிலையில், இந்த ஆண்டு பொங்கல் வருகை அதிக அளவில் இருக்குமென்பதால் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நுழைவு சீட்டு வழங்கப்படும் இடத்தில் பொதுமக்களிடையே நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 20 டிக்கெட் கவுன்டர்கள் முழுமையாக செயல்படுவதோடு, ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படும்.

இந்த நிலையில், காணும் பொங்கலன்று 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்படும். பூங்கா நுழைவு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் இலவச வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வெளியேற 2 தனித்தனி வழிகள், ஒரு வழி பஸ் நிலையம் செல்வதற்க்கும், மற்றொன்று கார் பார்க்கிங் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்படும். பார்வையாளர்களை வரிசையில் சீராகவும், விரைவாகவும் அனுப்ப ஒவ்வொரு டிக்கெட் கவுண்ட்டருக்கும் சவுக்கு கம்பு மூலம் தடுப்பு அமைக்கப்படும். நுழைவு சீட்டு வழங்கிய பிறகு பூங்காவுக்கு பார்வையாளர்கள் விரைவாக செல்வதற்கு ஒரே நேரத்தில் 10 வரிசைகளில் சோதனை செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பூங்கா நுழைவு வாயிலிலேயே போலீஸ் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்படும். மேலும் 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்படும்.

பொங்கல் விடுமுறை நாட்களில் பூங்காவுக்குள் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து ஒழுங்குமுறை, நகை பறிப்பு மற்றும் பர்ஸ் திருட்டு போன்ற குற்ற செயல்களைத் தவிர்க்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்