< Back
மாநில செய்திகள்
கனியாமூர் வன்முறை வழக்கு: காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மாநில செய்திகள்

கனியாமூர் வன்முறை வழக்கு: காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

தினத்தந்தி
|
3 July 2024 5:54 PM IST

வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி 2022ம் ஆண்டு மரணமடைந்தார். இவர், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பள்ளி சூறையாடப்பட்டு கலவரம் மூண்டது. இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த சூழலில் கனியாமூர் வன்முறை வழக்கு தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது கனியாமூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதிபதி, 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வன்முறை தொடர்பான வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்