< Back
மாநில செய்திகள்
தண்டோரா போட்டு எச்சரிக்கை எதிரொலி:  கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகை போலீசில் ஒப்படைப்பு  பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தண்டோரா போட்டு எச்சரிக்கை எதிரொலி: கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகை போலீசில் ஒப்படைப்பு பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்

தினத்தந்தி
|
21 July 2022 4:30 PM GMT

கிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்த நிலையில் கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகையை ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். அதேபோன்று, மேஜை உள்ளிட்ட பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்.


சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ந்தேதி, மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இறுதியாக இது கலவரத்தில் முடிந்தது.

இந்த கலவரத்தின் போது, பள்ளிக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த மேஜை, இருக்கைகள், ஏசி எந்திரங்கள், மின் விசிறிகள், ஏர் கூலர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தூக்கிச் சென்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்தும் சூறையாடி, அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றனர். அதோடு மட்டுமின்றி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் ஓட்டி சென்றனர்.

தண்டோரா போட்டு எச்சரிக்கை

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிராமப்பகுதியில் தண்டோரா போடப்பட்டு, கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் அந்த பொருட்களை வைத்திருப்பவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஏரியில் வீசி சென்றனர்

இந்த நிலையில், தற்போது இந்த பொருட்கள் திரும்பி வரும் நிலை அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஈசாந்தை கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான மாணவர்களின் இருக்கைகள் வீசப்பட்டு கிடந்தது.இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணன் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அங்கு கிடந்த இருக்கைளை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நகையை ஒப்படைத்தனர்

இதற்கிடையே ஒரு கிராமத்தை சேர்ந்த சிலர் சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கலவரத்தை வேடிக்கை பார்க்க சென்ற போது அங்கு கிடந்த 4 பவுன் தோடு நகையை எடுத்து சென்றதாகவும், அதை தற்போது ஒப்படைத்து விடுவதாக கூறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

இதேபோன்று இன்னும் பலர் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை ஒப்படைக்க வருவார்கள் என்று போலீசார் தரப்பில் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்